சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுகடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என எதிர் பார்ப்பு எழுங்நதுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கின் கீழ்  அமலாப்பத்துறை ரெய்டு நடத்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.  இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறியவர், அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமின் மனுக்கள் மாவட்ட மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில்,  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில்,  நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று  விசாரணைக்கு  வர உள்ளது.

இன்றைய விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அமைச்சரின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பினர் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலப் பாதிப்பு என கூறி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து ஓய்வெடுத்து வருகிறார்.