மும்பை: இந்தியா – வங்கதேச அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக வங்கதேச அணி நிர்வாகத்திடம், பிசிசிஐ சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போட்டியை பகலிரவு ஆட்டமாக நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியிடம் ஏற்கனவே பேசியுள்ளார். மேலும், வங்கதேச கிரிக்கெட் போர்டிடமும் அனுமதிக் கேட்டுள்ளார்.

காலையிலேயே தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு பொதுவாக ஆட்கள் வருவதில்லை என்பதால், பல நாடுகளில் டெஸ்ட் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகின்றன. இதற்காக இரவில் நன்றாக தெரியும் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படும்.

இப்போட்டியில் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக, டின்னர் இடைவேளை இடம்பெறும். வழக்கமான ‍டெஸ்ட் போட்டிகளில் சிவப்புநிறப் பந்து பயன்படுத்தப்படுகிறது.

பிசிபி எனப்படும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செயல்பாடுகளுக்கான தலைவர் நிஜாமுதீன், “பகலிரவு ஆட்டம் குறித்த இந்தியாவின் கோரிக்கைக் குறித்து பரிசீலித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” என்றுள்ளார்.

பகலிரவு ஆட்டத்தை ஏற்கனவே பல நாட்டு அணிகள் விளையாடிவிட்ட நிலையில், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இன்னும் அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.