புதுடெல்லி: இந்திய தலைநகரில் நிலவும் மிகமோசமான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையில், டெல்லியில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட டி-20 போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தாண்டில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராவதை மனதில் வைத்தே, இந்திய அணிக்கான போட்டித் தொடர்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களைப் போலவே, வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும், 50 ஓவர் போட்டிகள் இடம்பெறவில்லை. இந்தியாவிற்கு வரவுள்ள வங்கதேச அணி, மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்க‍ேற்கவுள்ளது.

முதல் டி-20 போட்டியை டெல்லியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலவும் காற்று மாசுபாடு பிரச்சினையாக மாறியுள்ளது. ஏற்கனவே, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தபோதே மாசுபாடு பிரச்சினை எழுந்து, இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடினர்.

தற்போது வங்கதேசம் ப‍‍ங்கேற்கும் போட்டியின்போதும் மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டால், வங்கதேச அணியின் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், போட்டித் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் இருப்பதால், மாசுபாடு குறையும் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.