பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதால், குமாரசாமி தலைமையிலான கர்நாடக மாநில கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிருப்தி காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு மிரட்டி வருவதால், ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசு போலவே தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திக்க கர்நாடக சட்டப்பேரவையான விதான் சபாவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள்  சபாநாயகரை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்குவதாகவும், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதன் காரணமாக அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் பாஜகவின் பண பேரத்துக்கு ஆசைப்பட்டு, ஆட்சிக்கு குழப்பம் செய்து வருகின்றன. ஏற்கனவே சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் இதுபோல குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், அவர்களுக்கு கடந்த மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம், காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த எம்எல்ஏக்கள்  2 பேர் ஆட்சிக்கு எதிராக தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்க்கிஹோலி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.  இதன் காரணமாக குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கர்நாடகாவில் ஆளும் மஜத – காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மஜத – காங்கிரஸ் எம்எல்ஏக்களை அச்சுறுத்தியும் பிளாக்மெயில் செய்தும் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் குமாரசாமியும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் ஆட்சி கவிழ்ந்தால் தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்றும் இதற்கு காங்கிரஸ் – மஜத தலைவர்கள்தான் காரணம் என்றும் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைசேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உள்பட 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, கர்நாடக காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ்வது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.