அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர்.

அமெரிக்க போர் விமானம் மூலம் கை கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது ஒரு வழக்கமான நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுகடத்தும் விமானம் என்று தலைப்பிட்டு வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் ஏற்றுவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவிற்கு எலன் மஸ்க் “ஹாஹா வாவ்” என கமெண்ட் செய்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? என்றும் இதுபோல் வீடியோ வெளியிடுவதும் ஒரு வழக்கமான நடவடிக்கை தான் என்று வழக்கம் போல் சாதாரணமாக கடந்து போகுமா என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.