சென்னை:

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின்  வீடு,  அவரது மகன் கல்லூரி மற்றும், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தேர்தல் ஆணையத்தில் வருமான வரித்துறையினர்  அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கை மீது ஆய்வு நடைபெற்று வருவதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் நடத்தப்படுமா, நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியும் என்று கூறி உள்ளனர்.

தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனல் கக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையனர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடிக்கணக்கான ரூபாய், கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கி உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது பள்ளி, கல்லூரி உள்பட  ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

காட்பாடியில் துரைமுருகனின் வீடு, மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, ஆதரவாளர்களின் வீடு, சிமெண்ட் கிடங்கில் தேர்தல் செலவினப் பார்வையாளர் உஜ்வல்குமார் தலைமையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து   சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, காட்பாடி அருகே வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான வீடு, சிமெண்ட் கிடங்கில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனுள் கவரில் பணம் போடப்பட் டிருந்தது. அந்த கவரின்மேல், ஊர் பெயர், வார்டு எண் ஆகியவையும் குறிப்பிடப் பட்டிருந்ததால் அவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இந்த சோதனையில்  மொத்தம் ரூ. 11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக   மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகள் அனைத்தும்  14 அட்டைப்பெட்டிகளிலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் 2 பைகளிலும் துணை ராணுவ பாதுகாப்புடன்  சென்னை வருமானவரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து வரும் தேர்தல் அதிகாரிகள், வேலூர் தொகுதியில் தேர்தலை செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து ஓரிரு நாளில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.