பெங்களூரு: கர்நாடக அரசியல் சித்து விளையாட்டில் பங்கேற்ற 12 காங்கிரஸ் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரின் முடிவு என்ற ஒரு பெரிய சவாலை கடந்தாக வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கர்நாடக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் மற்றும் அவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு அவர்களுடைய கட்சிகள் கொடுத்த கடிதங்கள் போன்றவை சபாநாயகரின் முடிவுக்காக இன்னும் காத்துக்கொண்டுள்ளன.

இந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் பலர் அமைச்சர்களாக ஆகும் ஆசையில் இருப்பவர்கள். பாரதீய ஜனதா தரப்பில் இவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 பேருக்காவது அமைச்சர் பதவி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடியூரப்பா.

இதுதவிர, பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளிக்கும் 2 சுயேட்சை உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கியாக வேண்டும். அவர்களில் ஒருவரும் தகுதி நீக்க ஆபத்தில் சிக்கியுள்ளார்.

அதேசமயம், பாரதீய ஜனதா தரப்பில் அமைச்சராகும் ஆசையில் இருப்போரின் எண்ணிக்கையும் மிக அதிகம். எனவே, இவர்கள் அனைவரையும் எப்படி சமாளிப்பார் எடியூரப்பா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அமைச்சர்கள் ஆக முடியும். ஒருவேளை தோல்வியடைந்தால், சட்ட மேலவை மூலமாக, இந்த சட்டசபையின் பதவிகாலம் முழுவதும் அமைச்சர் ஆக முடியாது என்று சட்ட சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது.