கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு வாய்ப்பு உள்ள தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்காமல் அனைத்து இடங்களிலும் பாஜக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து அதிமுக-வுக்கு செல்வாக்குள்ள கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தமிழர்கள் அதிகம் வாழும் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் தொகுதிகளில் இதற்குமுன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்பதால் 2024 நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக-வுக்கு தனது பலத்தை நிருபிக்க அதிமுக திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் என்பதால் இதுகுறித்து நாளை (ஏப் 20) நடைபெற இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவு எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதேவேளையில், ஓ.பி எஸ் ஆதரவாளரான புகழேந்தி கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை சமீபத்தில் சந்தித்து பேசியதை அடுத்து அதிமுக தனித்து போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைக் கூட பெற முடியாது என்றும் கர்நாடக அதிமுக-வினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று அக்கட்சியினரும் அரசியல் நோக்கர்களும் கருதுவதால் நாளை நடைபெறும் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு முக்கிய அறிவிப்பையும் எடுக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.