டில்லி

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றவரை ஓரின திருமணம் செய்தால் இந்திய குடியுரிமை கிடைக்குமா என டில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் ஓரின திருமணங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன.   ஆனால் இந்தியாவில் இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.  இத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரி ஓரின சேர்க்கையாளர்கள் டில்லி உயர்நீதிமன்றத்துக்குப் பல மனுக்களை அளித்துள்ளனர்.   அவை அனைத்தும் இதுவரை நிலுவையில் உள்ளன.

அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியரான ஜாய்தீப் சென்குப்தா என்பவர் அமெரிக்கக் குடியுரிமை  பெற்ற பிளைன் ஸ்டீபன்ஸ் என்பவரை ஓரின திருமணம் செய்துள்ளார்.  ஸ்டிப்பன்ஸுக்கு ஒ சி ஐ எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் என்னும் அந்தஸ்து அளிக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், “சென்குப்தா மற்றும் ஸ்டிபன்ஸ் ஆகியோர் 20 வருடங்களாகப் பழகி வந்துள்ளனர்.  தற்போது இருவரும் ஓரின திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  அமெரிக்கச் சட்டம் அந்த திருமணத்தை அங்கீகரித்துள்ளது.   விரைவில் அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது.  எனவே ஸ்டீபன்ஸுக்கு இந்தியக் குடிமகன் அந்தஸ்து வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து டில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய நோட்டீஸில், “இந்த திருமணத்தை இந்தியாவில் ஏற்க முடியுமா?  வெளிநாட்டினர் இந்தியக் குடியுரிமை பெற்றவரை ஓரின திருமணம் செய்தால் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியுமா?  இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ள பட்டுள்ளது