கொரோனாவால் பாதிக்கப்பட்ட பதி : பணிவிடையை கைவிடாத பத்தினி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏதோ தீண்டத்தகாதவர்களைப்போல நடத்துவது இங்கே அதிகமாகிவரும் இந்த நேரத்தில் 76 வயது கணவரைக் காப்பாற்ற 10 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்த அவரது மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் மதன கோபாலுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தனது கணவருக்கு கொரோனா எனத் தெரிந்ததும் 66 வயதான அவரது மனைவி லலிதா உடனடியாக மருத்துவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று அங்கேயுள்ள கொரோனா வார்டிலேயே கணவருடன் 10 நாட்களும் தங்கி இருந்து அவருக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்துள்ளார்.  இந்த வயோதிகத்திலும் 10 நாட்கள் சிகிச்சை முடிந்து மதனகோபால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்வான செய்தியாகும்.
 தன் கணவருக்காக கொரோனாவை பற்றிய எந்த பயமும் இன்றி கூடவே இருந்து அவரை கவனித்துக் குணமாக உதவிய அவர் மனைவியின் செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.  மேலும் தொடர்ந்து பத்து நாட்கள் கொரோனா வார்டிலேயே தங்கியிருந்ததால் லலிதாவுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்கிற சந்தோசமான முடிவு வந்துள்ளது.
– லெட்சுமி பிரியா