லக்னோ:

துறவியர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கக்கூடாதா? என்று ஆதங்கம் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் அறிவித்து உள்ளது. இது சர்ச்சை களை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், துறவிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்த பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாரதரத்னா விருது குறித்து  கருத்துத் தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், கடந்த 70ஆண்டுகளாகத் துறவியர்களில் ஒருவருக்குக் கூட பாரத ரத்னா விருது வழங்கப்பட வில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

மேலும், துறவிகளான தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சிவக்குமார சுவாமி போன்றோர் நாட்டின் சமூக முன்னேற்றத்துக்காக  ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.