கலைஞர் கருணாநிதி, தனது சொந்த ஊரிலிருந்து, புகைவண்டிக்கு பணமில்லாமல், சென்னைக்கு திருட்டு ரயிலேறி வந்தார் என்று கண்ணதாசன் தனது ‘வனவாசம்’ என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாக அரசியல் என்றாலே ‘அ, ஆ’ அறியாத நபர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பலர் கிண்டலடித்துப் பேசுவதுண்டு.

ஆனால், அப்போதே பியுசி வரை படித்து, சொந்த ஊரில் கையெழுத்துப் பிரதி நடத்தி, திராவிட இயக்கங்களின் கூட்டங்களில் பேச்சாளராக இருந்து, நேரடியாக சென்னை வராமல், முதலில் தமிழகத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்று, கோவை ஜூபிடர் பிக்சரஸ் மற்றும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவற்றில் வெற்றிகரமான வசனகர்த்தாவாக இருந்து, எம்ஜிஆரை, தனது வெற்றிகரமான வசனங்களால் புகழ்பெற்ற ஹீரோவாக்கி, அதன்பிறகு சென்னைக்கு சென்றவர் கலைஞர் கருணாநிதி என்கிறது அவரைப் பற்றிய வரலாறு.

கருணாநிதி, டிக்கெட் எடுப்பதற்காக கொடுத்த காசை, கண்ணதாசன் செலவழித்துவிட்டார் என்றும், தான் எழுதிய பொய்யான தகவலுக்காக, அன்றைய நாட்களில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அவர் என்றும் செய்திகள் உண்டு.

சரி சரி… அந்த நினைவிலிருந்து வெளியேறி, இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு வருவோம். ஏனெனில், இதிலும் கண்ணதாசன் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

சமீபகாலங்களாக, அதிமுகவினர் தவிர்த்து, அக்கட்சிக்கு தொடர்பில்லாத ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் பாரதீய ஜனதாவினர் என்று பலரும், நாங்கள் எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் வழங்குவோம் என்று முழங்குகின்றனர்! அவர்களின் இந்த முழக்கம், அதிமுகவில் உள்ள எம்ஜிஆரின் பக்தர்கள் மற்றும் அரசியல் கணக்கீட்டாளர்களுக்கு கோபத்தை வரவழைப்பது ஒருபக்கம் என்றால், இந்த முழக்கம் வேறொரு விஷயத்தையும் கிளப்பி விட்டுவிட்டது.

உண்மையிலேயே எம்ஜிஆர் என்பவர் யார்? அவரின் ஆட்சி எத்தகையது? தமிழ்நாட்டில் அவருக்கென்று கட்டியமைக்கப்பட்ட இமேஜ் எப்படியானது? மற்றும் அது எவ்வாறு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது? என்பன போன்ற விஷயங்கள் சில இடதுசாரி இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் மட்டுமே முடங்கிக் கிடந்தன.

ஆனால், தற்போது இந்த திருவாளர்களின் முழக்கங்களால், எம்ஜிஆரின் ஆட்சி எத்தகையது? என்ற அலசல் வெகுஜன பத்திரிகைகளிலும் வரத் தொடங்கிவிட்டது. இதையெல்லாம்விட பெரிய விஷயம் என்னவென்றால், எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில், கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர் பற்றி எழுதிய “எம்ஜி ஆரின் உள்ளும் புறமும்” என்ற நூல் இப்போது பெரியளவில் பிரபலமாகி வருகிறது.

இணையதளங்கள் மட்டுமில்லாமல், ஊடகங்களில் அந்தப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், தற்போதைய நிலையில், இந்தப் புத்தகம் பலரையும் எளிதாக சென்று சேர்ந்து வருகிறது. அப்புத்தகத்தில், எம்ஜிஆரை பற்றிய பல விஷயங்களை, கவிஞர் கண்ணதாசன் ரொம்பவும் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அரசியல் வெற்றிக்கு வேறு எதையும்விட, இமேஜ் பில்டப் மிக முக்கியம் என்ற சூழல் நிலவும் இந்திய அரசியலில், மிக நீண்டகாலமாக நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டு வரும் இமேஜ்களில் எம்ஜிஆரின் இமேஜும் ஒன்று.

இப்போது, மேற்கண்ட திருவாளர்கள், ‘நாங்கள் பொன்மனச் செம்மலின் ஆட்சியைத் தருவோம், நாங்கள் மக்கள் திலகத்தின் ஆட்சியைத் தருவோம்’ என்று முழக்கமிடுவதன் மூலமாக, எங்கோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் இமேஜை தற்போது சந்திக்கு இழுத்துவந்து விட்டுவிட்டார்கள்!

ஒருவேளை, இதுகூட ஒரு திட்டமிட்ட செயலாக இருக்குமோ..?