சென்னை:

சென்னை மெரினா கடற்கரை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில், கடற்கரை பகுதிகளில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை 900ல் இருந்து 1352ஆக உயர்த்த அனுமதி அளிக்கும்படியும், சாலையோர வியாபாரிகளிடம் வாடகையாக ரூ.100 வசூலிக்கவும் அனுமதி கோரி சென்னை மாநகராட்சி  சார்பில் உயர்நீதி மன்றத்தில் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சியின் மனுமீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தெருவோர வியாபாரிகளிடம் இருந்து வாடகையாககுறைந்த பட்சம் ரூ.5ஆயிரம் வசூலிக்கலாம் என்று தெரிவித்தனர்.

மெரினா கடற்கரை பகுதியை அழகுப்படுத்துவது, மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது,  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாகவும், தற்போது, அங்கு 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, 27.4 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, 27 கோடி ரூபாய் செலவில், 900 புதிய வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும், மீனவர்களுக்கு ரூ.66லட்சம் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது. மேலும்,  வாகனங்கள் நிறுத்தத்தை பொறுத்தவரை, 457 கார்கள், 2 ஆயிரத்து 271 இருசக்கர வாகனங்கள், 80 பேருந்து போன்றவற்றை நிறுத்தும் வகையில் ராணி மேரி கல்லூரி, கலங்கரை விளக்கம் பகுதிகளில் இடம் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும்,  மெரினாவை சுத்தப்படுத்த 175 துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், 6 இடங்களில் அதி நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  மெரினாவில் 900 கடைகள் அமைப்பதற்கான எடுத்த முடிவுகள், லூப் சாலையில் நடைப்பாதை மற்றும், சைக்கிள் செல்ல பாதை போன்றவைகளுக்கு மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில், கடற்கரை பகுதிகளில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை 900ல் இருந்து 1352ஆக உயர்த்த அனுமதி அளிக்கும்படியும், சாலையோர வியாபாரிகளிடம் வாடகையாக ரூ.100 வசூலிக்கவும் அனுமதி கோரப்பட்டது.

கடைகள் அதிகரிக்கச் செய்வது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வாடகைகளை நிர்ணயிப்பதில் அதிகாரிகள் சில உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மாதத்திற்கு 5,000 ரூபாய்க்கும் குறைவாக வாடகைக்கு விடக்கூடாது என்றும்  தெளிவுபடுத்தியது.

ஏற்கனவே மெரினா கடற்கரையில் 900 கடைகள் அமைக்கப்படுவதே அதிகம் என்று தெரிவித்த நீதிபதிகள், மேலும் அதிக எண்ணிக்கையிலான கடைகள்  அனுமதிக்கப்பட்டால், அது கடற்கரையில் மக்கள் நெரிசலுக்கு வழிவகுக்கும் “என்று நீதிமன்றம் கூறியது.

வண்டிகளுக்கு மாதாந்திர வாடகையை நிர்ணயிப்பதற்கான திருத்தப்பட்ட திட்டத்தை தாக்கல் செய்ய நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த, விசாரணையை ஜனவரி 29 க்கு ஒத்தி வைத்தனர்.