கோவாக்சின், கோவிஷில்ட் இவ்விரண்டு தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் மர்மம் என்ன ? நாட்டில் உள்ள 7 பொதுத்துறை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் இருப்பது ஏன் ? வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த மருந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கி தடுப்பூசி தட்டுப்பாட்டை சீர் செய்யாமல் இருப்பது ஏன் ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் டவுன் டு எர்த் எனும் இணைய இதழ் மேற்கொண்ட புலனாய்வில் கிடைத்த விவரங்களை தனது இணைய இதழில் வெளியிட்டிருக்கிறது.

மனிதாபிமானம் காரணமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தாங்கள் கண்டுபிடித்த கோவிஷில்ட் மருந்தை இந்தியாவில் தயாரித்து கொள்ள இந்திய அரசுக்கு ஆக்ஸ்போர்ட மற்றும் பயோஎன்டெக் அனுமதி வழங்கியது.

கொரோனா இரண்டாவது அலை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வேகமாக பரவி தற்போது வட இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவரும் வேலையிலும், கோவிஷில்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை சீரம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களில் மட்டுமே தயாரித்து வருகிறது இந்திய அரசு.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஐ); தமிழ்நாட்டில் உள்ள பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம் (பி.சி.ஜி.வி.எல்), பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (பி.ஐ.ஐ) மற்றும் எச்.எல்.எல் பயோடெக்; உத்தரபிரதேசத்தில் உள்ள பாரத நோய்த்தடுப்பு மற்றும் உயிரியல் கழகம்; மகாராஷ்டிராவில் உள்ள ஹாஃப்கைன் பயோ-ஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட்; மற்றும் தெலுங்கானாவின் மனித உயிரியல் நிறுவனம் ஆகிய ஏழு நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான பணியை வழங்காமல் இருக்கிறது.

இந்த ஏழு நிறுவனங்கள் தவிர செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்ட 2016ம் ஆண்டு முதலே நிதியில்லாமல் செயல்படாமல் இருக்கிறது.

2018 ம் ஆண்டு இந்த மையம் மூடப்படுமோ என்ற சர்ச்சை எழுந்த போது தமிழ்நாட்டில் உள்ள எந்த தடுப்பூசி தயாரிக்கும் மையங்களையும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மூடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் அப்போது வலியுறுத்தியிருந்தார் என்பதும்.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது 2008 ம் ஆண்டு சென்னையில் உள்ள காசநோய் தடுப்பூசி மையமான பி.சி.ஜி. மற்றும் குன்னூரில் உள்ள பி.ஐ.ஐ ஆகிய நிறுவனங்களை சிறந்த தயாரிப்பு முறைகளை கையாளவில்லை என்று கூறி மூடினார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

பத்தாண்டுகளை கடந்தும் இவ்விரு நிறுவனங்களின் தயாரிப்பு முறைகளை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இதுவரை தயாரிப்பு பணி தொடங்க முடியாத நிலையில் உள்ளது.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழி என்று கூறப்படும் நிலையில், இந்திய மக்கள்தொகையில் அதிகபட்சமாக இதுவரை 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும், ஒரிசா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது.

ஏப்ரல் 16ம் தேதி மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க எடுத்த முடிவு காலம்கடந்த முடிவாக இருந்தபோதும் அதில் தடுப்பூசி தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களோ அல்லது செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி நிலையமோ இடம்பெறவில்லை என்று டவுன் டு எர்த் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

கோவாக்சின் தயாரிப்பு முறையை மும்பையில் உள்ள ஹாஃப்கைன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த மார்ச் மாதம் 17 ம் தேதி பிரதமருடனான காணொளி காட்சி கூட்டத்தில் எழுப்பிய கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை.

கொரோனா தொற்றுக்கு முன் உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நாடாக விளங்கிய இந்தியா, தற்போது சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை செய்து அவற்றுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் மட்டுமே தடுப்பூசி மற்றும் கொரோனா எதிர்ப்புக்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய முடியும் என்று மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் என்ற ஒரே நிறுவனத்திற்கு மருந்து தயாரிக்கும் உரிமையை வழங்கியிருப்பது கேள்விக்குறியதாக உள்ளது, மேலும் பல நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதியை வழங்கினால் மட்டுமே தட்டுபாடு நீங்கும் என்று இந்த புலணாய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் விபா வர்ஷினி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை தங்கள் உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமே வைத்திருக்கும் நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 9 கோடி டோஸ்கள் தேவைப்படும் நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து மாதம் ஒன்றுக்கு 7 கோடி டோஸ்கள் மட்டுமே தயாரிக்கும் நிலையில் இவற்றில் பெரும்பாலான மருந்துகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாவதும் உள்நாட்டு தேவைக்கு பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தாமல் இருப்பதும் அரசின் மெத்தனபோக்கை காட்டுவதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.