தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, வாக்குப்பதிவு 71.79% என்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான அலை அடிப்பதால், மக்கள் பெரியளவில் முன்வந்து வாக்களிப்பார்கள் என்றும், இதனால், வாக்குப்பதிவு 80%க்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. காலை வேளையில், பல தொகுதிகளில் மக்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை அடிப்படையாக வைத்தும் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகு வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கொரோனா அச்சம், யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம், சலிப்பு, ஆர்வமின்மை மற்றும் அதிக வெயில் போன்றவை காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

இந்த சட்டமன்ற தேர்தலில், வெறும் 71.79% வாக்குகளே பதிவானதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பதிவான 72.44% வாக்குகளைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற இதர மாநிலங்களான மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைவிட குறைவாக பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.