சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து பேசிய கருத்துக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது மூத்த அரசியல் தலைவர்களை ஓரம்கட்டி விட்டு தனக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசினார்.

பிரதமர் மோடி, அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரை ஓரங்கட்டி விட்டு பிரதமரானார் என்றும், அவர் குஜராத் முதலமைச்சரானதும் அவ்வாறே என்றும் கூறினார். மேலும் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் இருவரும் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமலேயே உயிரிழந்தனர் என்றும் தெரிவிதத்தார்.

அவரது இக்கருத்து பொது வெளியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு மறைந்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் காட்டமான பதிலளித்தனர். இந் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி மறைவு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.