சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த அருணாச்சலம் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச் செயலாளராக இருந்தவர் ஏ.அருணாச்சலம். இந்தக் கட்சி தொடங்கியதில் இருந்தே கமலுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமலுடன் சேர்ந்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார். இந்த சூழலில் சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் ஏ.அருணாசலம் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் அருணாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலனும், பாதுகாப்பும் கருதி தொலைநோக்கு சிந்தனையோடு 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்றும் விவசாயத்தை பூர்வீக தொழிலாக செய்து வருபவன் என்ற வகையில், வேளாண் சட்டத்தின் பயன்பாடுகள் தெரிந்த காரணத்தால், இந்த சட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்று உயர்நிலைக்குழு கூட்டத்திலும், கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடமும் முறையிட்டேன்.
இதனை பா.ஜ.க. கட்சி கொண்டு வந்த விவசாய சட்டங்களாக நீங்கள் எண்ண வேண்டாம். மத்திய அரசாங் கம் விவசாயிகள் நலன் சார்ந்து கொண்டு வந்த சட்டங்களாக எண்ணி நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். தி.மு.க.வின் மாதிரி கட்சியாக மக்கள் நீதி மய்யம் ஆகிவிடக்கூடாது என்று விண்ணப்பம் வைத்தேன்.
இந்த சட்டங்களின் பயன்பாடுகளை விவசாயிகள் அடைந்துவிட முடியாமல் விவசாயிகளின் கையை தட்டிவிடும் பணியைதான் எதிர்க் கட்சிகள் செய்கின்றன. அதற்கு நீங்களும் துணை போக வேண்டம் என்று வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் அதற்கு இணங்காத காரணத்தால், நான் ஒரு விவசாயி என்ற முறையில் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்புகளை உதறி தள்ளிவிட்டு பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.