சென்னை: சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தமிழகஅரசின் மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா? என கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டமன்றத்தின் இறுதிநாள் கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மூலிகை கள் குறித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் விளக்கங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

இந்த விஷயத்தை கவனித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இதைக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது குறிப்பிட்டு பேசினார். அப்போதுஇ,

”சுகாதாரத்துறை தொடர்பான புத்தகத்தில் ஏன் தமிழ், ஆங்கில மொழியுடன் இந்தியும் உள்ளது. இது மும்மொழிக்கொள்கைக்கான முன்னோட்டமா?” என ஸ்டாலின் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”இது ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட மூலிகைகளின் சிறப்பம்சத்தைக் குறிப்பிடும் புத்தகம்.  அதனால், அதில் மூலிகைகளின் பெயரைக் குறிக்க இந்தி இடம்பெற்றுள்ளது. இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.  இந்த மூலிகை புத்தகம் தேசிய அளவில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதால் இந்தி இடம் பெற்றுள்ளது.

தமிழகஅரசைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என முதல்வர் அறிவித்ததையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இருமொழிக் கொள்கையில் மாற்றமில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ”புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் உள்ளன. இது மாணவர்களைப் பாதிக்கும். குலக்கல்விக்கு இடம் தரும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும். சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.