500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கறுப்பு பணத்தை எந்த அளவுக்கு ஒழிக்க உதவும் என்று பரவலாக விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆனால் வருமான வரித்துறையினரின் கடந்தகால அனுபவம் என்னவென்றால் கறுப்புப்பண முதலைகள் தங்கள் கறுப்பு பணத்தை பெரும்பாலும் பணமாக பதுக்குவதில்லை என்பதுதான்.
2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் வெறும் 6% கணக்கில் காட்டப்படாத பணம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது என்பது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆய்வில் கிடைத்த முடிவு ஆகும். பெரும்பாலான கறுப்பு பணமுதலைகள் தங்கள் பணத்தை வேறு சொத்துக்களாக மாற்றி வைத்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமானவரித் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் கடந்த ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான நிதியாண்டில் கறுப்பு பணமுதலைகள் சுமார் 7,700 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தங்களுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களிடன் பணமாக இருந்தது அதில் வெறும் 408 கோடி மட்டுமே இது அவர்கள் சேர்த்து வைத்த மொத்த கறுப்பு பணத்தில் வெறும் 5% ஆகும். எஞ்சிய பணத்தை வியாபாரங்களிலும், ஸ்டாக் மார்கெட்டுகளிலும், ரியல் எஸ்டேட் மற்றும் பினாமி வங்குகணக்குகளிலும் வைத்திருக்கின்றனர். 2015-16 நிதியாண்டில் பணமாக பறிமுதல் செய்யப்பட்ட கறுப்பு பணம் வெறும் 6% மட்டுமே.
ரூ.1 கோடி பணத்தை 1000 ரூபாய் கட்டுகளாக பதுக்கி வைத்தால் அது ஒரு சதுர அடி நிலத்தை ஆக்கிரமிக்கும், மொத்த பணத்தின் எடை 13 கிலோவாகும். இதுவே 100 கோடி பணமாக் இருந்தால் 1.3 டன் அளவு எடையுடன் சின்ன டாட்டா மேஜிக் வாகனத்தை நிறுத்திவைக்கும் அளவிலான இடத்தை ஆக்கிரமித்துவிடும். இதை கண்டுபிடித்து கைப்பற்றுவதும் எளிதாகும். எனவேதான் கறுப்பு பண முதலைகள் தங்கள் சொத்துக்களை பணமாக வைத்திருப்பதில்லை.
எனவே மோடி அரசின் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென அறிவித்த இந்த நடவடிக்கை 28% – 32% அடித்தட்டு பாமர மக்களையே வெகுவாக பாதிக்கும், இவர்களுக்கு வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் பணத்தை சேர்த்துவைக்க தெரியாது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவிலுள்ள 138,626 வங்கிகளில் 33% வங்கி கிளைகள் நகரங்களிலும் சிறு நகரங்களிலுமே உள்ளன. கிராமப்பகுதிகளில் வங்கிகளே இல்லை. வங்கிகள் இல்லாத இடங்களில் வசிக்கும் பாமர மக்களே அரசின் இந்த நடவடிக்கையால் வெகுவாக பாதிக்கப்படுவர் என்பது இந்த புள்ளிவிபரங்கள் மூலம் தெளிவாக புலனாகிறது.