காந்தி கேட்டுக்கொண்டதாலேயே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

1911 ம் ஆண்டு முதல் ஆறு முறை மன்னிப்பு கடிதம் எழுதியவருக்கு 1915 ல் தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய மகாத்மா காந்தி தான் மன்னிப்பு கடிதம் எழுதகோரினார் என்பது அபத்தமானது மட்டுமல்லாமல் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மகாத்மா காந்தி தான் மன்னிப்புக் கடிதம் எழுதச் சொன்னார் என்று சிறையில் இருந்து விடுதலையான பின் 1928ம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியான ‘சிறையில் என் வாழ்க்கை’ புத்தகத்தில் கூட குறிப்பிடவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா தன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி பிரிட்டிஷாரின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்த சாவர்க்கரின் தம்பி நாராயன் பின்னர் மகாத்மா காந்தியிடம் ஆலோசனை கேட்டார்.

காந்தியின் ஆலோசனைக்குப் பின் அரசியல் காரணங்களுக்காகவே தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் மன்னிப்பு கடிதம் எழுதியதாக காந்தி வழங்கிய ஆலோசனை கடிதத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ள ராஜ்நாத் சிங் அவரது கடிதத்தில் இடம்பெற்ற ஒன்றிரண்டு வார்த்தைகளை தனக்கு சாதகமாக வளைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறது.

அந்தமான் தீவுச் சிறையில் கொடுமையை அனுபவித்த சாவர்க்கரைப் போல் மேலும் சிலரும் அந்த காலகட்டத்தில் இதுபோன்ற கடிதம் எழுதியிருந்தார்கள் என்ற போதும் மகாத்மா காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியதும் சாவர்க்கர் இந்துத்துவா கொள்கையை உயர்த்திப் பிடித்ததுமே இப்போது பாஜகவினரின் அரசியல் ஆதாயத்திற்காக சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது.