காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநில தேர்தல், உட்கட்சி தேர்தல், நாட்டின் தற்போதய அரசியல் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநில உட்கட்சி பூசலைத் தொடர்ந்து கபில் சிபலின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் செயற்குழு கூடியிருக்கிறது.

கூட்டத்தின் துவக்க உரையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி “கட்சி விவகாரங்களை ஊடகங்கள் மூலம் பேசி தெரியவேண்டிய நிலையில் நான் இல்லை, நான் காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறேன், எந்த விவகாரமாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம்” என்று கூறியிருந்தார்.

சோனியா காந்தியின் இந்த பேச்சு, கட்சிக்குள் குழப்பத்தை விளைவிக்கவும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பதிலடியாக அமைந்தது.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், சோனியா காந்தியின் இந்த பேச்சு தொண்டர்களிடையே உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.