பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் எழுப்பி பலமாதங்கள் ஆன நிலையில் உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இருப்பினும் பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக்கத் தூக்கிச் சென்றனர்.

இதனையடுத்து அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக கடந்த ஞாயிறன்று அறிவித்த நிலையில் விவசாய சங்க தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு 5 நாட்கள் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீது போடப்பட்ட 2 எப்.ஐ.ஆர். குறித்த தகவல் வெளியானது. அதில், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ள போலீசார் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும், உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் அளித்ததும் தெரியவந்துள்ளது.

தவிர, மல்யுத்த பயிற்சிக்கு வந்த சிறுமியிடமும் தகாத முறையில் நடந்து கொண்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எப்.ஐ.ஆர். அனைத்தும் ஏப்ரல் 28 ம் தேதியே போடப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது எந்தவொரு விசாரணையும் நடைபெறாதது குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரிஜ் பூஷன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்தும் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரதமர் மோடி இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என்பதை நாட்டு மக்களுக்கு கூறுங்கள்.

பிரிஜ் பூஷனை நாட்டின் பிரதமர் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். இந்த நபருக்காக நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அமைதியாக இருக்கிறார். நாட்டின் விளையாட்டு அமைச்சர் இவரைப் பார்த்து கண்ணை மூடிக் கொள்கிறார்.

இவர் மீது நடவடிக்கை எடுப்பதில் டெல்லி போலீசார் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர். இவரை ஏன் அரசும், பாஜகவும் பாதுகாக்கின்றன?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.