புதுடெல்லி:

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்தது எப்படி என உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரியிடம் தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு முகநூலில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மார்கண்டேய கட்ஜு தலைமை நீதிபதியாக பணியாற்றியபோது, அவருடன் நீதிபதியாக பணியாற்றியவர் அர்ஜன் குமார் சிக்ரி.

சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவை நீக்கிய பிரதமர் தலைமையிலான 3 நபர் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரியும் இடம் பெற்றிருந்தார்.

அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்க பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரி மட்டுமே ஆதரவு கொடுத்தனர். மற்றொரு பிரதிநிதியான காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த முடிவை எதிர்த்தார்.

எனினும், பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஒரே முடிவை எடுத்ததால், அலோக் குமார் வர்மா நீக்கப்பட்டார்.

இது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறும்போது, ” ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து மட்டும் சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் நீக்கியுள்ளனர்.

அலோக் குமார் வர்மாவிடம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்காமல், அவரை நீக்க முடிவு செய்தது எப்படி? இந்த குற்றச்சாட்டில் விசாரணை முழுமையாக முடிவுறாத பட்சத்தில் நீதிபதி சிக்ரியும், அலோக் குமார் வர்மா தவறு செய்துவிட்டதாக எப்படி முடிவுக்கு வந்தார்.

அலோக் குமார் வர்மாவை நீக்கியதன் பின்னணியில் பெரும் சதி உள்ளது. விசாரணைக் குழுவில் நடந்தது குறித்து நீதிபதி சிக்ரியிடம் தொலைபேசியில் பேசி தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு மார்கண்டேய கட்ஜு முகநூலில் பதிவிட்டுள்ளார்.