புதுடெல்லி:

கூண்டில் அடைத்த கிளியை பறக்கவிட்டால் ஆபத்து என்று அறிந்துதான், மீண்டும் அதை கூண்டில் அடைத்துள்ளார்கள் என சிபிஐ இயக்குனர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.


கடந்த 2013- ம் ஆண்டு நிலக்கரி முறைகேடு வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்றம், சிபிஐ புலனாய்வு அமைப்பை கூண்டுக்கிளி போல் பயன்படுத்தக் கூடாது என்று அட்டார்னி ஜெனரலிடம் கூறியது.
அதனை நினைவுபடுத்திய கபில்சிபல், கூண்டுக்கிளியான சிபிஐ இயக்குனரை உச்சநீதிமன்றம் விடுவித்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் மட்டக்குழு, மீண்டும் கூண்டில் பிடித்து அடைத்துள்ளது.

கிளி பறந்துவிட்டால், பல உண்மைகள் வெளியே வரும் என்று பயந்துவிட்டார்கள். விளக்கம் அளிக்க வாய்ப்பு தராமலேயே பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு, அலோக் வர்மாவை நீக்கியது கவலை அளிக்கிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.