புதுடெல்லி:

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் பொறுப்பற்ற முறையில் பதற்றம் ஏற்படுத்துவதாக, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மற்று டென்னிஸ் வீரர் மகேஸ் பூபதி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


விமானப் படை அதிகாரி அபிநந்தனை விடுதலை செய்வோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததும், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில், இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும், இது இந்தியாவின் டைட்டானிக் வெற்றி என்றும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டனர்.

மேலும் இந்தியாவின் அழுத்தத்தால் கமாண்டர் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார் என்று அந்த தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தனர்.

ரிபப்ளிக் டிவியின் இத்தகைய போக்குக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, அபிநந்தனின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடாதீர்கள் என பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலித்தன.

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இது குறித்து எழுதும்போது, பத்திரிகை செய்திகளுக்கு நான் எப்போதாவது தான் கருத்து சொல்வேன். இது கொண்டாடப்பட வேண்டிய நேரம் இல்லை அர்னாப் என்று பதிவிட்டுள்ளார்.

அபிநந்தன் பத்திரமாக வீட்டுக்கு திரும்ப வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் டைட்டானிக் வெற்றி என்பது எல்லாம் தேவையா என டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்த விசயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பி வருவது அனைத்து தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.