சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்த சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளில், மாயாவதியின் கட்சி அதிக தொகுதிகளில் வெல்வதற்கு காரணம், தொகுதிப் பங்கீட்டில் அக்கட்சி பாதுகாப்பான தொகுதிகளை அதிகளவில் பெற்றுக்கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

முறையே 37 மற்றும் 38 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், வென்றதென்னவோ முறையே 5 மற்றும் 10 மட்டுமே. இந்த இரண்டு கட்சிகளும் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பெற்ற ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 41.8%. ஆனால், இந்த தேர்தலில் அந்த வாக்கு சதவீதத்தைவிட இக்கட்சிகள் குறைவாகப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் கூட்டணியால், கடந்த தேர்தலில் 71 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா, இத்தேர்தலில் வெறும் 37 இடங்கள் மட்டுமே பெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பாரதீய ஜனதாவுக்கு குறைந்ததென்னவோ வெறுமனே 9 இடங்கள் மட்டுமே. ஏனெனில், பாரதீய ஜனதா தனது வாக்குப் பகிர்வு சதவீதத்தை இத்தேர்தலில் 7.2% அதிகரித்துக் கொண்டது.

இத்தேர்தலில், கடந்துமுறை பெற்ற 5 இடங்களையே சமாஜ்வாடி பெற்றது. ஆனால், மாயாவதியின் கட்சி கடந்த முறை பெற்ற இடங்கள் 0. ஆனால், இந்தமுறை 10 இடங்களைப் பெற்றுவிட்டது.

அந்தக் கட்சி, சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் யாதவர் வாக்கு வங்கி தன் கட்சிக்கு வந்துசேரவில்லை என்பதாக தெரிவித்துள்ளார் மாயாவதி. ஆனால், இது உறுதிசெய்ய முடியாத ஒரு கூற்றாக உள்ளது.