பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? மக்களிடையே வரவேற்பை பெற்ற ‘10 லட்சம் பேருக்கு வேலை’ என்ற லல்லுகட்சியின் அறிவிப்பு…

Must read

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் வெற்றிபெற்றால், 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என லல்லுபிரசாத் கட்சியான ராட்ஷடிரிய ஜனதாதளம் அறிவித்து உள்ளது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள   243 தொகுதிகளில்  முதல் கட்ட தேர்தல், அக்டோபர்  28ந்தேதி 71 தொகுதிகளுக்கும், 2வது கட்ட தேர்தல்  நவம்பவர் 3ந்தேதி 94 தொகுதிகளுக்கும், 3வது கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளுக்கும்  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ந்தேதி  நடைபெறுகிறது.


மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தற்போதைய முதல்வரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அதே வேளையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க லல்லு பிரசாத் கட்சி சார்பில், அவர் மகன் தலைமையிலான மெகா கூட்டணி தீவிரமாக பணியாற்ற வருகிறது.

4முறை முதல்வராக இருந்து வரும் நிதிஷ்குமார்  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 18 தொகுதிகள் சிறுகட்சிகளான  விகாஸ்சீல் இன்சான் கட்சிக்கும், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவளையில்,  ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில்  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மகாகட்பந்தன் (மெகா கூட்டணி) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 19 இடங்களிலும் சிபிஐ 6 இடங்களிலும், சிபிஎம் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே அவ்வப்போது கருத்துக்கணிப்புகளும் வெளியாகி அரசியல் நிலவரத்தை வெளிச்சம்போட்டு காட்டி வருகின்றன.  தேர்தலில் வெற்றிபெற்றால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என பாரதியஜனதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் 10லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்று அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் வெளியான கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், அவரது கூட்டணி வெற்றிபெறும் என்றும் தெரிய வந்தது. ஆனால், தற்போது, தேஜஸ்வி யாதவின் பல்வேறு அறிவிப்புகள் காரணமாக, கருத்துக்கணிப்புகள் மாறி வருகின்றன.

தேஜஸ்வி யாதவ், பீகார் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, கலக்கி வருகிறார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு உயர்ந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர்,   ‘10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை’ என்ற  அறிவிப்புக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், இதற்கு எதிர்வினையாற்றிய நிதிஷ்குமார்,  தேஜஸ்வி யாதவ்,   10 லட்சம் பேருக்கு எப்படி வேலை கொடுப்பார்? அதற்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா? ஜெயிலில் அவர் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியில் உள்ளாரா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், அதற்கும்  தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். 15 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருக்கும் நிதிஷ்குமார், எப்படி வேலை கொடுக்க முடியும் என்று கேட்கிறார். இதுதான் இவரது ஆட்சியின் லட்சணம். நானும் துணை முதல்வராக பதவி வகித்திருக்கிறேன். எப்படி இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்பது எனக்கு தெரியும். நீர் வாழ்க்கை பசுமை திட்டம் என்ற பெயரில் 24 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார். அதில் பாதிக்கும் மேல் அவரும், அவரது கட்சியினரும் சுருட்டி விட்டனர். மேலும் இந்த பிரசாரத்தில் தனது முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, அவரது விளம்பர செலவு மட்டும் 500 கோடி ரூபாய். இதை எல்லாம் ஒழுங்காக செய்திருந்தால், 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தேஜஸ்வி யாதவின் பிரசாரம் மாநில மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சமீபத்தில் வெளியான டைம்ஸ் கருத்துக்கணிப்பில், ஆளும் கட்சி கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு இடையே  வெறும்  2.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி,  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  34.4 சதவீத வாக்குகளும், மெகா கூட்டணிக்கு 31.8 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வெளியான கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமார் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இருந்த நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு  வேறாக இருப்பது, அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் மனநிலை மாறி வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article