நெல்லை: சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? என்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பயன்பெறப் போவது திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி மட்டுமே, மீனவர்கள் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், ’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ என தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
இரண்டு நாள் பயணமாக நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று அங்கு பாஜக சார்பில் நடத்தப்பட்ட நம்ம ஊரு, நம்ம பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் 108 பொங்கல் பானை வைத்து பொங்கலிடும் நிகழ்ச்சியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2008ம் ஆண்டு திட்டமிட்டபடி 4ஏ வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தால், பாஜக அதனை கண்டிப்பாக எதிர்க்கும். 4ஏ வடிவமைப்பு படி அந்த திட்டம் செயல்படுத்தினால் அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேறு வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர திட்டமிருப்பதாக மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிபடுத்தவில்லை. ஆனால் அங்கு பாலம் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் இருக்கும் ஒரு வரியை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தின் செயல்படிவம் 4ஏ இல்லாமல், மத்திய அரசுடன் இணைந்து புதிய பாதையை கண்டறிந்தால் பாஜக ஆதரிக்கும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திமுக கொண்டு வரப்போகும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே. இந்த விஷயத்தில் திமுக அரசு பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளது.
4ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் நாடாளுமன்றத்தில் ராமர் சேது பாலம் இருக்கிறதா என்பதற்கு தெளிவான பதில் இல்லை என்று மட்டும்தான் தெரிவித்துள்ளார். 18,000 ஆண்டுக்கு முன் இருந்ததாக சொல்லப்பட்டுள்ள ராமர் சேது பாலத்திற்கு சில தடயங்கலும் கிடைத்துள்ளது. அமைச்சர் கருத்தை திருத்தி பேசியதற்கு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சரிடமும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கோவை ஈஷாவில் பயிற்சி பெற்று வந்த சுபஸ்ரீ மரணம் மற்றும் புதுக்கோட்டை சம்பவம் ஆகியவை தொடர்பாக காவல்துறை விசாரித்து பல்வேறு ஆதாரங்களை வைத்துள்ளது. ஆனால் அதனை வெளியிடக் கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இப்போதுள்ள ஆளுநர்கள் தகுதியானவர்களாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஆளுநர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அவர்களே உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆளுநர் செய்யும் செயல் நியாயமானது என்றும், இப்போது முதலமைச்சரான பிறகு ஒரு நியாயம் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் புறக்கணிப்பு பற்றிய கேள்விக்கு, என்னை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் சின்னம் போடப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், மாநில அரசு தான் முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டுவதற்கு முன், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தமிழ்நாடு அரசு ஏன் போடுவதில்லை என்று கேள்வியை முன் வைக்கிறேன். என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் 2021ஆம் ஆண்டில் 25 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள 84 மசோதாவில் 15க்கு மட்டுமே அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளார் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், திமுகவினர் கவர்னர் உள்பட எதிர்க்கட்சியினரை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ என தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடித்தத்தில் , பொது மேடைகளில் பெண்களை அவதூறாக பேசுவது திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. நீண்ட காலமாக தமிழக மக்கள் இந்த மலிவான அரசியல் மேடை பேச்சை எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பாஜக பெண் தலைவர்களை கட்சிக் கூட்டத்தில் தரைக்குறைவாக பேசியதாக திமுக உறுப்பினர் சைத சாதிக் மீது முறைப்படி புகார் அளித்தோம். கடும் எதிர்ப்பு மற்றும் தொடர்ச்சியான அழுத்தத்துக்குப் பிறகே அவர் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்தது. ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது காவல் துறை.
காவல்துறை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக இயங்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக இயங்கி தங்கள் அடிப்படை பொறுப்புகளை மறந்து இன்று காவல்துறை செயலற்று போய் இருக்கிறது.
இழிவான மேடை பேச்சுகளுக்கு பெயர் பெற்ற திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆளுநரை அவதூறாக பேசியதுடன் அவரது பேச்சில் மாண்புமிகு ஆளுநரை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலரான ஆளுநரை தவறான வார்த்தைகளால் விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நீண்ட காலமாக, திமுகவினர், பொது மேடைகளை, தரக்குறைவான பேச்சுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போல் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற அவதூறான பேச்சுகளை கண்டும் காணமல் இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மை அந்த அவதூறுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.