டில்லி:

புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில், மதுரை உயர்நீதி மன்றம் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த  தடையை நீக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநில ஆளுநராக உள்ள பாஜக ஆதரவாளர் கிரண்பேடி, மாநில அரசின் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தப்படுவதை தடுத்து வந்தார். அதற்காக மத்திய உள்துறை அமைச்சசகம்  புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் கிரண் பேடி தலையிட்டு முடிவுகள் எடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு அதிகாரம் வழங்கியிருந்தது.

இதன் காரணமாக மாநில அரசுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே தொடர்மோதல் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மத்தியஅரசின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏப்ரல் 30ம் தேதி (2019)  மத்திய அரசின் சிறப்பு அதிகாரம் உத்தரவை  ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் மாநில  அரசின் நடவடிக்கைகளில் அன்றாடம் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து மத்தியஅரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மே 8ந்தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன் வழக்கை ஒத்திவைத்தது.

வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்த நிலையில், காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர்,  புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக . இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் மீண்டும் வாதிட்டார். அப்போது,  இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும்  என்று கோரினார்.

அதையடுத்து,  துணை நிலை ஆளுநர் தலைமையில் 7-ம் தேதி நடக்க இருந்த கேபினட் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த தடை விதித்த நீதிபதிகள்,   கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அத்துடன்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை வழக்கில் சேர்க்கவும் உச்சநீதிமன்ற  நீதிபதி ஆர்.,எம். ஷா உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.