மேசையில் துப்பாக்கி… உதட்டில் புன்னகை!

Must read

வி.கே. சசிகலாவின் அண்ணன் விநோதகன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதுதான் தற்போது தொலைக்காட்சிகளில் பிக் பிளாஷ் நியூஸ்.

ஜெ. உடல் அருகே மகாதேவன்

ஜெயலலிதாவைச் சுற்றி இருந்த சசிகலாவின் சொந்தங்களிலேயே தடாலடி பிரமுகர் என்று பெயர் எடுத்தவர் மகாதேவன். வயது 47.

ஆரம்பத்தில் மன்னார்குடியில் வசித்த இவர், பிறகு தஞ்சை அருளானந்த நகருக்கு குடிபெயர்ந்தார்.

இவரது வீடு. இவரது பராக்கிரமங்கள், பகடிகள் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறது தஞ்சை.

ஆமாம்..  கடவுள் பக்தி மிகுந்தவர் மகாதேவன். அதிலும் சில சமயங்களில் பக்தி முத்திவிடும்.  அந்த காலகட்டங்களில் அவரது வீட்டுக்கு முன் பெரிய அண்டாவில் தண்ணீர் வைக்கப்படும். அவரைக் காண வருபவர்கள், அண்டாவில் இருக்கும் தண்ணீரை மொண்டு கால்களை கழுவிக்கொண்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும் என்று உத்தரவிடுவார். அவர் சொல்லை மீற முடியுமா? எத்தனை பெரிய விஐபிக்களானாலும் பயபக்தியோடு கால்களைக் கழுவிக்கொண்டு மகாதேவனை தரிசிக்க வீட்டுக்குள் செல்வார்கள்.

அவரிடம் பெரும் பஞ்சாயத்துக்கள் பல வந்தது உண்டு. அதே போல அவ்வப்போது சிறு சிறு பஞ்சாயத்துக்களும் வருவது உண்டு. அப்படியான ஒரு சம்பவம்.

மகாதேவனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் தனியார் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தார். காலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள் பலர் அதில் பயணிப்பார்கள். அப்போது ஒரே ரவுசுதான்.  படிக்கட்டில் தொங்குவது, நடத்துனரிடம் வம்பிழுப்பது, பெண்களை கிண்டல் செய்வது என்று மாணவர்களின் டார்ச்சர் அதிகமானது.

ஒருநாள் பேருந்தின் டாப்பில் ஏறிவிட்டனர் மாணவர்கள். காவல்துறையிடம் சொல்லியும் பயனில்லை.

பொறுக்க முடியாத பஸ் ஓனர், மகாதேவனின் “நீதிமன்றத்தில்” புகார் செய்தார். மறுநாள், அந்த பேருந்தில் காலை நேரத்தில் மகாதேவனின் “படை”யைச் சேர்ந்த பத்து பன்னிரண்டு பேர் ஏறினர். ரவுசு கொடுத்த மாணவர்களில் ஐந்து பேரை பிடித்து வந்து நிறுத்தினர்.

ஜெ.வால் நீக்கப்பட்டவர்களில் மகாதேவன் பெயர்..

அவர்களை ஏறிட்டு பார்த்த மகாதேவன், கொஞ்ச நேரம் யோசித்தார். பிறகு தீர்ப்பளித்தார்:

“பேருந்தின் டாப்பில் ஏறிச் செல்வதில் உங்களுக்கு சந்தோசம்.. அப்படித்தானே! தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் டாப்பில் ஏறிச் செல்லுங்கள். அப்படியே திரும்பி வாருங்கள்!”

இப்படி ஜாலியான “தீர்ப்புகளை” கொடுக்கும் மகாதேவன், மிகக் கோபக்காரரும்கூட.

தன் சொல்படி கேட்காதவரை.. (அதாவது பெரிய வி.ஐ.பிக்களாக இருந்தால்) தனது வீட்டுக்கு அழைப்பார். உள்ளே அறையில் நடுநாயகமாக போடப்பட்டிருக்கும் மேசையின் அந்தப்பக்க நாற்காலியில் கம்பீரமாக மகாதேவன் அமர்ந்திருப்பார். இந்தப்பக்க நாற்காலியில் (வேண்டாத) வி.ஐ.பி. அமரவைக்கப்படுவார்.

மேசையில் நவீன ரக துப்பாக்கி ஒன்று இருக்கும். அதை நாய்க்குட்டியை செல்லமாக தடவிக்கொடுப்பதுபோல தடவிக்கொண்டே புன்னகையுடன் மகாதேவன் பேச ஆரம்பிப்பார்.

எதிரே இருக்கும் வி.ஐ.பி.  என்ன செய்வார்?

வேறென்ன செய்வார்.. மகாதேவன் சொல்லும் டீலை ஏற்றுக்கொண்டு கிளம்புவார். அவ்வளவுதான்.

மொத்தத்தில் வெளிப்படையாக டெல்டா மாவட்டங்களும், உள்ளூர நடுக்கத்துடன் இதர தமிழ்நாடும் மகாதேவனைப் பார்த்தது என்றால் மிகையில்லை.

இப்படிப்பட்ட மகாதேவன், ஒருவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவமும் நடந்தது.

அரசியல் இதழ் ஒன்றின் தஞ்சை மாவட்ட நிருபராக பணியாற்றி வந்தார் ஒருவர்.

மிகுந்த தைரியத்துடன் எவரைப்பற்றியும் ( உண்மைக) எழுதுவார். அதே நேரம் தினமும் இரவானால் மது அருந்துவார்.

அவர் ஒருமுறை, மகாதேவன் தரப்பினர், மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்று எழுதிவிட்டார்.  உடனே  ஆவேசப்பட்ட மகாதேவன், அந்த நிருபரை தனது வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்.

எதிரில் வந்த நின்ற நிருபர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

அந்த நிருபர் அதிரச்சி அடையவில்லை. மெல்லிய குரலில், “நான் இங்க வர்றதை என் சக நிருபர்கள் இருவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். தவிர என்னை அறைந்த விவகாரத்தையும் எழுதத்தான் போகிறேன்” என்றார்.

இதை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. அப்போது ஜெயலலிதாவின் கோபத்துக்கு மகாதேவன் ஆளாகியிருந்த நேரம் வேறு.

மகாதேவன்

உடனடியாக அந்த நிருபரிடம் மன்னிப்பு மேல் மன்னிப்பு கேட்டு, தனது காரிலேயே நிருபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மகாதேவனுக்கு மிக விருப்பமானது, வழிபாடுகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோயிலில் மிகத் தீவிரமாக புனரமைப்பு பணிகளை மேற்கொள்வார். வழிபடுவார்.

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் இருக்கும் குபேரன் கோயிலை அப்படித்தான் சீரமைத்தார். கடந்த பிப்ரவரி மாதம், நாகர்கோயில்ல உள்ள நாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.. வேண்டுதல்: சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்பதுதான்.

ஜெயலலிதா இருந்த போது போயஸ் இல்லத்தில் வைத்து ஆடிட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கிறது அல்லவா? அப்போது போயஸ்கார்டனில் முழு அதிகாரத்தோடு வலம் வந்தவர் மாகதேவனார்தான். அந்தத் தாக்குதலிலும் இவரது பெயர்தான் அடிபட்டது.

அதன் பிறுக போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்டார். மேலும், ‘இனி கட்சிக்காரர்கள் யாரும் மகாதேவ னோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், மகாதேவன் அதை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. அதே போல கட்சிக்காரர்களும்கூட இதை பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை.

எப்போதும்போல மகாதேவனை தரிசித்தே வந்தார்கள். அவர்கள் வேண்டிய வரம் கிடைத்தபடியேதான் இருந்தது.  அந்த காலகட்டத்தில், “ஜெயலலிதா பற்றி எனக்கு கவலை இல்லை.. என் அத்தை சசி அங்கு இருக்கிறார். அது போதும்” என்று சிலரிடம் வெளிப்படையாகவே இவர்  கமெண்ட் அடித்ததாக தகவல்கள் வெளியாகின.

அது உண்மைதான் என்பது அடுத்த சில வருடங்களிலேயே இவரை,  “ஜெ. பேரவை மாநிலச் செயலாளர்” ஆக்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில்தான்,  கடந்த 2011ம் ஆண்டு  டிசம்பர் 19ம் தேதி சசிகலாவை  துரோகி என்றும், தனக்கு எதிராக சதி செய்வதாகவும் சொல்லி கட்சியை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா.

சசிகலாவோடு அவரது கணவர் நடராஜன் உட்பட உறவினர்கள் 13 பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள். அவர்களில் மகாதேவனும் ஒருவர்.

மருத்துவமனை

இந்த மன்னார்குடி குடும்பத்தினரோடு கட்சிக்காரர்களுக்கு எந்தவித ஒட்டோ உறவோ இருக்கக்கூடாது என்றும் ஜெயலலிதா எச்சரித்தார்.

ஜெயலலிதாவுக்கு மாற்றாக வேறு யாரை முதல்வராக கொண்டுவரலாம் என சசிகலா குடும்பம் திட்டமிட்டதாகவும் இதை அறிந்தே ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் அடுத்த அடுத்த . 3 மாதங்களில் மீண்டும் சசிகலாவை கட்சிக்குள்ளும், தன் வீட்டுக்குள்ளும் அழைத்துக்கொண்டார் ஜெயலலிதா.

இந்த இடைப்பட்ட மூன்று மாத காலங்களில்தான் சசிகலா உறவினர்களின் ஆட்டம் பாட்டம் கட்டுக்குள் இருந்தது.  ஆனால் இந்த காலகட்டத்திலும் தனது வழக்கமான பஞ்சாயத்துகள் மற்றும் இதர தொழில்களை அசராமல் செய்துவந்தவர் மகாதேவன்.

தஞ்சாவூரில் உள்ள  விநோதகன் மருத்துவ மனை இவருக்குச் சொந்தமானதுதான். தவிர டி.வி.எம். என்ற பெயரில் பேருந்துகள் இயங்குகின்றன. கொஞ்சம் நிலபும் உண்டு.

“இதெல்லாம் வெளிப்படையாக தெரியும் சொத்துக்கள். இந்த சொத்துக்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமான அளவுக்கு பல கோயில்களுக்கு நிதி அளித்துள்ளார் மகாதேவன். அப்படியானால் அவரது சொத்துக்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று மகாதேவன் ஆதரவாளர்கள் பெருமையாக(!)ச் சொல்வது உண்டு.

இவர் மீது  கொலை மிரட்டல் அடிதடி வழக்குகள் பதிவானதும் உண்டு.

ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டபோது, சுற்றி நின்ற சசிகலாவின் சொந்தங்களில் மகாதேவனும் ஒருவர்.

More articles

Latest article