டெல்லி: திமுக எம்.பி. கதிர் ஆனந்த், மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரின் பேலில்,  டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சாணக்கியபுரி போலீசாரி  விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தினசரி வெவ்வேறு பிரச்சினைகள் குறித்து திமுக எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். இதனால், சபையில் காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.   பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 9-வது நாள் கூட்டமான நேற்றைய சபை கூட்டத்தின்போது,  தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் தான் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாக புகார் கூறினார்.  புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் தன்னை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்ததாகவும், அவர்கள், மக்களவையில் பேசுவது குறித்து மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  மக்களவை தலைவர், உறுப்பினர், எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கதிர்ஆனந்த் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக,  டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணை நடத்த சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று காவல்துறையினர்,   கதிர் ஆனந்த் எம்பி தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கதிர் ஆனந்தின் அறைக்கு சென்றவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பிய போலீசார், அங்கிருந்த வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பதிவை ஆய்வு செய்கின்றனர்.