துபாய்: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை ருசித்துள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் மற்றொரு புரம் ஆட்டத்தின்போது, தன தோனி நடந்துகொண்ட விதம் குறித்தும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.  கேகேஆர் அணி வீரர் ராகுல் திரிபாதி காயத்துடன் ஆட்டத்தை எதிர்கொண்ட நிலையில், அவுட் ஆகி சென்றபோது, அவரது முதுகில் தட்டி தோனி ஆறுதல் கூறிய காட்சி தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  இதுதான் ‘தல தோனி’, ‘கூல் தோனி’ என டிவிட்டரில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

ஐபிஎல்2021 இறுதிப்போட்டி நேற்று துபாய் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கும் கேகேஆர் அணிக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி   பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். ருத்ராஜ் கெய்க்வாட் 32 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா 31ரன்கள், மொயீன் அலி 37 ரன்கள் சேர்த்தனர். டூ பிளிசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.   20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி ஆரம்பத்தில் மிரட்டியது.  வெங்கடேஷ் அய்யார் அசாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்  32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாக ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. 91 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த கொல்கத்தா அதன்பிறகு 20 ஓவர்களில் 165 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை  வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது பல ருசிகர சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று தல தோனியின் செயல்பாடு அவரை மேலும் மேலும் உச்சத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது.

போட்டியின்போது, பீல்டிங் செய்தபோது கொல்கத்தா அணி வீரர் ராகுல் திரிபாதி காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் பீல்டிங் செய்யாமல் பாதியில் வெளியேறினார். இதனால் பேட்டிங் செய்வது கேள்விக்குறியாக இருந்தது. இருந்தாலும், அவர் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட வலியுடன்  7-வது வீரராக களம் இறங்கினார். ஆனால், அவரால் சரிவர விளையாட முடியாத நிலையில் 2 ரன்களில் அவுட்டானார். அதனால், மிகவும் சோகத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இதை கவனித்த சிஎஸ்கே கேப்டன், நம்ம கூல் தோனி,  ராகுல் திரிபாதியின் தோளில் தட்டி கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‘இதுதான் தல’ என்று தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.