ஏழுமலை வெங்கடேசன்:
75 நாட்கள் அப்பல்லோவில் ஒரு முதலமைச்சரை., உங்களை மட்டுமே நம்பிய ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு சென்றீர்கள்.. வைத்திருந்தீர்கள்.. எவ்வளவோ பேர் கேட்டார்கள்.. எங்குமே வெளிப்படைத்தன்மை இல்லை..

தோழி நலமாக இருக்கிறார் என என்றாவது ஒரு நாள், நீங்கள் மீடியா முன்பு,,அவ்வளவு ஏன் ஆஸ்பிடல் வாசலே கதி என்று நம்பியிருந்த தொண்டர்கள் மத்தியாலாவது நேரில் வந்து பேசியிருக்கிறீர்களா?
இந்த இடத்தில்தான் உங்கள் மீதான பார்வை, மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரியவராக உங்களை காட்ட ஆரம்பித்தது.
முதலமைச்சர் இறந்தார். அவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உங்கள் அருகே வந்தனர். உடனே அவர்களை கட்சியிலும் சேர்த்தீர்கள். அது உங்கள் உள்கட்சி விவகாரம்..

நீங்கள் தற்காலிக பொதுச்செயலாளர் ஆனீர்கள்.. அதுவும் உங்கள் கட்சி விவகாரம்..ஆனால் ஆட்சிக்கு சிக்கலின்றி போய்க்கொண்டிருந்த உங்கள் ஓபிஎஸ்சை பதவி விலகச்சொன்னீர்கள்.. “இப்போது போய் ஏன் இப்படி?’’ என்ற விமர்சனம் எழுந்தது. போகட்டும் உட்கட்சி ஜனநாயகத்தில் மற்றவர்களுக்கும் வாய்ப்ப வழங்கப்படவேண்டியது நல்லதே..

மற்றொரு மூத்த தலைவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க நீங்கள் ஆசைப்பட்டிருந்தால், அதற்கு ஓபிஎஸ் பேராசையால் பதவியை விட மறுக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கும்… ஆனால் நீங்களே அந்த பதவியை வேண்டும் என்று வேக வேகமாக களமிறங்கினீர்கள்..

அரசியலே வேண்டாம் என்று தோழியிடம் சொல்லிவந்ததாக சொன்ன நீங்கள், தோழி இறந்த இரண்டே மாதங்களில் உங்கள் உள் எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்..

போகட்டும்..வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரவிருக்கிற நிலையில் இப்போதைக்கு பதவிப்பிரமாணம் வேண்டாம் என்று ஆளுநர் தரப்பு சைகை பாஷையில் சொன்னபோது, சில நாட்களாவது பொறுமையோடு காத்திருந்தீர்களா? ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதாக பல முறை கதவை தட்டிக்கொண்டே இருந்தீர்கள்.

குற்றமற்றவர் என்ற நிலை இறுதியாக உறுதிப்படுத்தப்படப்பட்டும்.. கம்பீரமாக அரியணை ஏறுகிறேன் என்று சொல்லியிருந்தால் யாராவது உங்களை நோக்கி விமர்சனத்தை முன் வைத்திருக்கமுடியுமா?

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. சட்டத்தை மதித்து ஏற்றுக்கொள்கிறேன் என்று உடனே சிறைக்கு சென்றுவிட்டு அதன் பிறகு சலுகைகளை கேட்டிருக்கலாம். சரணடைவதற்கே நாலுவார அவகாசம் கேட்டு காத்திருந்து, கிடைக்கவில்லை என்ற பிறகே நீதிமன்றத்தில் சரணடைந்தீர்கள்.

இன்னொருபக்கம், எம்எல்ஏக்களை கொண்டுபோய் உங்கள் ஆட்கள் சொகுசு விடுதியில் தங்கவைத்தார்கள்.. 11 நாட்கள் மக்கள் பிரதிநிதிகளை குடும்பத்தாருடன்கூட அண்டவிடாமல் அப்படியே… அவர்களை அடைகாத்தார்கள்..
வேறுவழியில்லாமல் இன்னொருவருக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்த பிறகே..பிறகே எம்எல்ஏக்களை வெளியே கொண்டு வந்தார்கள். இங்கும் அதே பிரச்சினைதான்..

மக்கள் மத்தியில் அவர்களை ஓரிரு புழங்கவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருந்தால், யார் என்ன சொல்லமுடியும்?.
நம்பிக்கை வாக்கெடுப்பாவது நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு எதிர்கட்சிகள் பங்கேற்று நடந்ததா? அதுவும் இல்லை.
குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகள் கேட்டபடி ரகசிய வாக்கெடுப்பாவது நடந்ததா அதுவும் இல்லை..

எதிர்கட்சிகளே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்றார்கள்.
ஜனநாயகத்தில் ஆட்சி செய்ய சில தகுதிகள் கொண்ட எல்லோருக்குமே உரிமை உள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிசெய்யக்கூடாது என்று எங்குமே சட்டத்தில் தடைஇல்லை.

வந்தது தவறு என்று சொல்லவில்லை. வந்த விதம், ஒவ்வொரு கட்டத்திலும் முறையானதுதானா வெளிப்படை தன்மையானதுதானா நேர்மையானதுதானா என்று சொல்லுங்கள்..

உங்கள் மீதான எங்களின் பார்வை தவறு என்றால் எந்த இடத்தில், எப்படி என்று விளக்குங்கள்….எங்களை திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம்