சென்னை:
நேற்று (18.02.2017) நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்.

நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக கோரியது. இதை சபாநாயகர் மறுத்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது தான் தாக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் புகார் தெரிவித்தார்.

பிறகு காவலர்கள் சபைக்குள் புகுந்து திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினர். அப்போது தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது குறித்து ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர். கடந்த 1988ம் ஆண்டு இதே போல சட்டமன்றத்தில் அமளி நடந்ததும், ஆட்சி கலைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.