இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ? என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது மத்திய மாநில அரசு முன் எழுந்திருக்கிறது.
1991 ம் ஆண்டு மே 21 ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் போது முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொடூரமான முறையில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில் மற்ற ஆறு பேருக்கும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை வழங்கியது.
விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் என்கிற ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்களா அல்லது இந்தியாவிலேயே தஞ்சம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற ஒரே உத்தரவுடன் இலங்கையில் இருந்து இந்தியா வந்த தீவிரவாத குழுவைச் சேர்ந்த இவர்களில் வெடிகுண்டு செய்வதில் வல்லவனான முருகன் இந்தியா வந்ததும் தான் முதன்முதலில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட நளினியை பின்னாளில் சிறையில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டான்.
இதனால் நளினியின் கணவனாக இந்திய குடியுரிமையை கோர முருகன் முயற்சி செய்யக் கூடும் என்ற போதும் சட்டவிரோதமா இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கு இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து மற்ற மூன்று பேருடன் சேர்ந்து முருகனும் இங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில், அகதிகளாக வந்து முகாமில் தங்கியிருக்கும் மற்ற அகதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் கொலை செய்யும் எண்ணத்துடனும் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்குடன் ஊடுருவியவர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இலங்கை அகதிகள் முகாமில் தங்க உத்தரவாதம் அளிப்பது யார் என்றும் அதற்கு மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட காவல் கண்கணிப்பாளரோ அனுமதி வழங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாறாக அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க அந்நாட்டு அரசு கோருமாயின் ஏற்கனவே பொருளாதார சிக்கலால் அங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கேட்டு செல்லும் நிலையில் இந்த நான்கு பேரும் அங்கு செல்வார்களா அல்லது இங்கிருந்தபடி இந்தியா அல்லது வேறுநாட்டு அரசிடம் தஞ்சம் கேட்டுப் பெறுவார்களா என்பதும் புலப்படவில்லை.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இந்த நான்கு பேருக்கும் உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ள போதிலும் இலங்கையைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் விடுதலையான பிறகு எங்கு செல்வார்கள் என்ற மாபெரும் கேள்வி எழுந்திருப்பதோடு இவர்களுக்கு தஞ்சம் அளிப்பதன் மூலம் வேறுமாதிரியான அரசியல் மற்றும் சட்ட பிரச்சனைகளையும் மத்திய மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவே சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏற்கனவே பல கசப்பான அனுபவங்களைப் பெற்ற திமுக தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் ஒரு சவாலான தருணத்தை சந்தித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.