காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பபட்டது. இதையடுத்து, கால்வாய் கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட ஆயிரக்கணக்கான ஏரிகள் மளமளவென நிரம்பி வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள்.  புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு  நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.
மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து  இருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.  24அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.