மும்பை:

சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கவில்லை என்றும், மக்களை எங்களை எதிர்க்கட்சியாக இருக்கவே வாக்களித்து உள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில்  ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இன்று காலை சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவூத், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவே செய்லபடும். அதற்கே மக்கள் வாக்களித்து உள்ளனர் என்று தெளிவுபடுத்தினார்.

மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம் என்று தெளிவுபடுத்திய சரத்பவார், பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு  மக்களின் ஆணையைப் பெற்றுள்ளன, எனவே அவர்கள் விரைவில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிப்பதே எங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள  ஆணை என்று தெரிவித்தவர்,.  அவர்கள் (பாஜக-சிவசேனா) கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள், தற்போது இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளை மீண்டும் ஒன்றாக வருவார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மாநிலத்தில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்து உள்ளது.  பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு மத்தியஅரசு  உதவ வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்கு பணம் செலுத்தாததால், நிதி அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும்,  நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தவர், சஞ்சய் ரவூத் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அவர் வேறு ஏதும் பேசவில்லை என்று கூறினார்.

மாநிலத்தில் புதிய அரசு அமைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சி அமையுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.