டில்லி

காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் 7 வருடம் வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆயுள் குறையும் என்பது சீன கணக்கெடுப்பாகும். கடந்த 1950 முதல் 1980 வரையிலான கால கட்டத்தில் சீனாவின் ஹுவாய் நதிக்கு வடக்கே கடும் காற்று மாசு ஏற்பட்டது.  அங்கு குளிர் அதிகமாக இருந்ததால் ஏராளமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது முக்கிய காரணம் ஆகும்.   இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் மரணம் அதிகரித்தது.  இதை மையமாகக் கொண்டு ஒரு விதி உருவாக்கப்பட்டது.

இந்த விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஏர் குவாலிடி லைஃப் இண்டெக்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காற்றுத் தரவரிசை எண் மூலம் இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.   சமீபத்தில் வட இந்தியாவில் கங்கை நதி ஓரம் உள்ள டில்லி, அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.  இந்த பகுதிகளில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளதால் இந்த பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்படி  இந்த பகுதிகளில் வாழும் மக்களின் ஆயுள் 7 வருடம் வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   மற்ற இடங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்கு சுமார் 2.6 வருடங்கள் வரை ஆயுள் குறைய வாய்ப்பு உள்ளது.  இது குறிப்பாக டில்லி நகரில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   டில்லியில் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களில் பலருக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டுள்ளது.  இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.