சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சாதிய மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு பார்த்ததாக 3 பேராசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சமத்துவம் பேணப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சமத்துவம், சமூக நீதி என்பது அரசின் கொள்கையாக உள்ளது என ஆளும் திமுக கூறி வருகிறது. அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு சாதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், மற்ற சமூகத்தினரிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. மதிப்பெண் இல்லாம் சாதி கோட்டாவில் தங்களுக்கு இணையாக வருபவர்கள் என்றும், ‘’சத்துணவுக்காக ஸ்கூல் வந்தவர்கள் என்றும் நலிந்த சாதி மாணவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாவது நீண்ட வருடங்களாகவே நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பள்ளிகளிலேயே தலித் மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் போன்றவை மற்ற மதாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள் அரசு ஸ்காலர்ஷிப் பெற தகுதியற்றவர்களா என்ற ஏக்கம் ஏற்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிகளில்கூட, சிறுபான்மையினர், தலித் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது, மற்ற மாணாக்கர்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், நாம் அரசின் சலுகைகள் பெற தகுதியற்றவர்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் பேசும்போது, அவை வன்மமாக தலை தூக்கத் தொடங்குகிறது. சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டிய கல்விச் சாலைகளிலேயே சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவதால், பள்ளி மாணவர்களிடையேயும் சாதி வெறுப்பு, மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் எதிரொலியே நாங்குநேரி சம்பவம்.
ஏற்கனவே கடந்த 2008 ல் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை தமிழ்நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் ஏற்பட்ட படுபயங்கர மோதல் சம்பவம் தொலைகாட்சியில் லைவ்வாக ஒளிபரப்பாகி பார்ப்பவர்களை குலை நடுங்க வைத்ததை மறக்க முடியாது. இந்திய அரங்கில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிலையில், சென்ற ஆண்டு அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தங்கள், தங்கள் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக கயிறு கட்டி வந்த இரு பிரிவு மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுஅதில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போதைய நாங்குநேரி சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து வருகிறது. சமூக நீதி, சமதர்மம் என்று கூறி வரும் திமுக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. கட்சிகள் கைவிட வேண்டும்
தமிழகத்தில் ஆண்டுதோறும் 60 முதல் 70வழக்குகள் மாணவர்கள் சாதிமோதல் தொடர்பாக பதிவாகிது என குற்ற ஆவன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், சாதிகளை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மற்றும் வழங்கப்படும் சலுகைகளே காரணம். நாட்டின் வளர்ச்சி அசூர வேகத்தில் சென்றுகொண்டிருந்தாலும், சாதியை குறிப்பிட்டு மக்கள் வேறுபடுத்தப்படுவதால், சாதிய வேறுபாடுகளும், மோதல்களும் அசூர வேகத்திலேயே வளர்ந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள் என்பதை மறுக்க முடியாது. பிஞ்சு வயதிலேய நஞ்சை ஊட்டும் வகையில் தயாரிக்கப்படும் பல திரைப்படங்களில் குறிப்பிட்ட சாதியினை இழிவுபடுத்தியும் மற்றொரு சாதியினரை உயர்த்தியும் காட்டி வன்மத்தை தூண்டுகின்றன. இதன் பாதிப்பு, சிறுவயதிலேயே சாதிய வன்மம் தலைதூக்கத் தொடங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக தகவல்கள் பரவி வந்தன. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை கண்காணித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, வியாசர்பாடி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை அரசு கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
அரசு பணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள், இடமாற்றம் செய்யப்படுவதால் என்ன பயன்?
சாதி மத வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கவே, மறைந்த முதலமைச்சர் காமராஜர், பள்ளிகளில் சீருடை, மதிய உணவு, நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, கல்வியை மெருகேற்றினார். ஆனால், அதன்பின் ஆட்சிக்கு வந்த திராவிட அரசுகள், சாதிக்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்து, மக்களிடையே சாதிய வெறுப்பை அதிகரித்து வருகின்றது தவிர, சாதி சமயமாற்ற சமுதாயத்தை உருவாக்க முன்வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழ்நாட்டில் சமத்துவம் பேணப்படுகிறதா?
சமத்துவம் என்பது அனைவருக்கும் பாகுபாடு இன்றிய சமமான வாய்ப்புகளை அளிப்பதே. சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது மக்களாட்சியின் இரண்டு அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டில் சமத்துவம் பேணப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். ஆட்சியாளர்கள், சமத்துவம்… சமத்துவம் என பேசி வந்தாலும் எந்தவொரு பங்களிப்பில் சமத்தும் பேணப்படவில்லை என்பதே உண்மை வரலாறு.
சமத்துவம் என்பது ‘ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவினரிடையே வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் “அனைவரும் சமம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் செயற்படுதல்’ ஆகும்.
இயற்கை மனிதர்களை நிறம், திறமை, உடல், உயரம், வலிமை ஆகியவற்றில் சமமாக உருவாக்கவில்லை. இச்சமத்துவமின்மையை எம்மால் சரி செய்யவும் இயலாது. ஒரே மாதிரியான இரட்டையர் கூட தமக்குள் காணப்படும் திறமையின் அடிப்படையில் வேறுபடுகின்றனர். ஆனால் சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை சரி செய்ய இயலும்.
குடிமை சமத்துவம் :
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை பெறுதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், சாதி மற்றும் சமயக் கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது. சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது.
அரசியல் சமத்துவம் :
குடிமக்கள் அதாவது 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமில்லாமல் வாக்குரிமை அளித்தல், பொது அலுவலகத்தில் பங்குக் கொள்ளும் உரிமை, அரசை விமர்சனம் செய்யும் உரிமை என்பன அரசியல் சமத்துவத்தை குறிக்கிறது.
பாலின சமத்துவம் :
மனித இனங்களில் ஆண், பெண் இருபாலரும் தமது தனிப்பட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆண்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைக்காமல் அவர்களது திறமைக்கும், ஆளுமைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து சமநிலையில் நடத்துதல் ஆகும்.
சட்டத்தின் முன் சமத்துவம்
சட்டத்தின் முன் சமத்துவம் என்பது ஒரு சட்டத்தின் கொள்கையாகும். இது ஒரு சமூகத்தின் அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான உரிமைகள், கடமைகள் மற்றும் உத்தரவாதங்களை குறிப்பது ஆகும்.
மனித உரிமைகளுக்கான யுனிவர்சல் அமைப்பு “அனைவரும் சட்டத்தின் முன் சமம், வேறுபாடு இல்லாமல், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான உரிமை உண்டு” என பிரகடனம் கட்டுரை 7 இல் கூறுகிறது.
பல நாடுகளில் சட்டத்திற்கு முன் சமத்துவம் என்ற கொள்கை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பு அதன் குடிமக்களின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இங்கிலாந்தில் பின்பற்றப்பட்ட மரபில் இருந்து வந்ததாகும்.
சமத்துவமான பாதுகாப்பு சட்டம்
அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்புச் சட்டம் என்பது அமெரிக்க அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும்.
சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர்.
சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் பாதுகாப்பை வழங்கும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கியது.
சமத்துவத்தை மேம்படுத்தும் வழிகள்
- அனைவரையும் சமமாகவும், நியாயமாகவும் நடத்துதல்.
- அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
- முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
- சமமான கல்வி.
- சமமான சேவைகளும், வாய்ப்புகளும்.
- சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல்.
முழுமையான சமத்துவத்தை பேண, இனி வரும் காலங்களிலாவது சாதி சான்றிதழை ஒழிக்க வேண்டும். குழந்தைகளிடையே சாதி, மத அடையாளங்கள் பேணப்படுவதை தவிர்க்க வேண்டும். சாதி, மத ரீதியிலான சலுகைகள் அகற்றப்பட வேண்டும். அனைவரும் ஒன்றே என்ற மனநிலையை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், சாதி, மத வேறுபாடும், சாதி மத, இன ரீதியிலான மோதல்களை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.