95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? நட்டாவுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

Must read

மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதுபோல, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2நாள் பயணமாக தமிழ்நாட்டில் சுற்றுப்பணம் மேற்கொண்டார். அதன்படி, நேற்று மதுரை வந்த நட்டாவுக்கு  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜகவின் பல்துறை வல்லுநர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் சென்றவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மதுரை நிகழ்ச்சியில் பேசிய நட்டா, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்காக மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. மீதமுள்ள இடத்தையும் கொடுத்தால்தான்,  மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியும்,  தமிழகஅரசு விரைவில் மத்திய அரசு கேட்ட நிலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க் கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றவர்,  எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் மற்றும் ஐசியூ வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்படும் என்றும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும்,. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறினார். நே.பி.நட்டாவின் பேச்சு சர்ச்சையானது.

எய்ம்ஸ் செங்கல்லை காட்டி கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குவேட்டையாடிய திமுகவும்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை, அதுபோல மத்தியஅரசும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடம் அப்படியே வனாந்தரமாக காணப்படுகிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜே.பி.நட்டா கூற்றின்படி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் வைக்கப்பட்ட செங்கல் கூட இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொய் சொல்வதை மட்டுமே முழுநேர பிழைப்பாக வைத்திருக்கிறது பாஜக என  சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

More articles

Latest article