டில்லி:

டந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு  பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடப்படும் என பாரதியஜனதா அறிவித்திருந்தது.

இதுகுறித்து ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்பது குறித்து பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.  அதன் காரணமாக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.

மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதன் காரணமாக எந்தவித பயனும் கிட்டவில்லை. பண முதலைகள் அனைவரும் வங்கி அதிகாரிகள் துணையுடன் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டனர்.

இந்நிலையில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் மோகன் குமார் சர்மா என்பவர், நரேந்திர மோடி மக்க ளுக்கு வாக்குறுதி அளித்தபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் எப்போது போடப்படும்? என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பத்திரிகை களுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?  என்பது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி  கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மத்திய தகவல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார்.

இதற்கு தற்போது பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘தகவல் ‘ என்பதன் கீழ் இடம் பெறவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 2-ன் கீழ் ஆவணங்கள், மின்னஞ்சல், பத்திரிகை குறிப்புகள் மின்னணு வடிவத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே,  பதில் அளிக்க முடியாது.

என்றும் பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளதாக சர்மா கூறி உள்ளார்.