சென்னை :

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபடும், அப்படி பிரிந்தால் எந்த அணியுடனும், தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சொல்லிவிட்டு சென்றதாக அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அ,தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்று சொல்லப்படும் ஜெயா தொலைக்காட்சி, தி.மு.க.வை எப்போதுமே கடுமையாக விமர்சித்து வருவது வழக்கம்.  ஜெயலலிதா மறைவு, அ.தி.மு.க.வுக்குள் பிளவு என்று அடுத்தடுத்து அரங்கேறிய நிகழ்வுகளால் சூழல் மாறியுள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்று அறியப்படும் ஜெயா தொலைக்காட்சியில், அ.தி.மு.க. அரசு குறித்து எதிர்மறையான செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் நேரடி எதிரியாக பார்க்கப்பட்டும் தி.மு.க. கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேட்டி நேற்று ஜெயா டி.வியில் ஒளிபரப்பானது.

அப்போது நெறியாளர், “தற்போதைய அரசியல் சூழலில் கருணாநிதி ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் காட்சிகளே மாறி இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்களே. அவ்வாறு கருணாநிதி இருந்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும்”  என்று கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி – துரைமுருகன்

இதற்கு பதிலளித்த துரைமுருகன், “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் முன்னர் நானும், ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் இருந்த போது ஒரு ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போனார் கருணாநிதி.

அதாவது, “ஜெயலலிதா உடல்நிலை தேறி வீடு திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு ஏதேனும் நடந்தால் நிச்சயம் அந்த கட்சி இரண்டாகப் பிரியும். அப்படி கட்சி பிரியும் போது ஏதேனும் ஒரு அணி நம்மிடம் வந்து ஆதரவு கேட்கக்கூடும். . அப்படி ஆதரவு கேட்டால் எந்த அணிக்கும் தி.மு.க.  ஆதரவளிக்கக் கூடாது. எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக ஜானகி அணி, ஜெ. அணி என பிரிந்த போதும் என்னிடம் வந்து ஆதரவு கேட்டார்கள் ஆனால் அப்போது நான் மறுத்துவிட்டேன்.

ஒருவேளை நீங்கள் யாருடைய அணிக்காவது ஆதரவு தெரிவித்தால் அது வரலாற்றில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும். மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள், பிறர்  தோளில் எப்போதுமே பயணிக்கக் கூடாது. தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தான் ஆட்சியில் அமர வேண்டும்.

அதை விடுத்து ஏதோ ஒரு அணியை ஆதரித்து அவர்கள் ஆட்சி அமைத்தாலோ, அல்லது அவர்கள் ஆதரவில் திமுக ஆட்சியில் அமர்ந்தாலோ மக்கள் மன்னிக்க மாட்டார்கள். புறவாசல் வழியாக எந்த காரணத்தைக் கொண்டும் ஆட்சியில் அமரக் கூடாது என்று கருணாநிதி எங்களிடம்  கூறினார்ட என்று தெரிவித்த துரைமுருகன், “எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த ஆட்சிக்கு எதிராக அரசியல் விதிப்படி என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. ஆளுநரை சந்தித்து அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதைச் சொன்னோம். ஆனால் முடிவு எடுக்க வேண்டிய ஆளுநர் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்தார்” என்று துரைமுருகன் தெரிவித்தார்.