புதுடெல்லி: பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென கோரியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.

மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் செயல்பட வேண்டிய தனது பொறுப்பை முற்றிலும் துறந்துவிட்ட மோடி அரசு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மற்றும் அதற்கான வசதிகள் இல்லாத மாநில அரசுகளின் தலையில், கொரோனா மேலாண்மை பொறுப்பை தள்ளிவிட்டு விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நிருபர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், நாட்டின் மக்களையோ மற்றும் பொருளாதாரத்தையோ பூட்டி வைக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியான காலத்தில், நீதி வழங்கல் என்பது ஒரு அடிப்படை சேவையாக திகழ்வதை நாட்டின் நீதித்துறை அமைப்பு உறுதிசெய்ய வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊரடங்கால் ஏற்படக்கூடிய நடைமுறை நெருக்கடிகள் மற்றும் சிக்கல்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, தற்போது மோடி அரசு செயல்படுகிறது என்றும் அவர் நெத்தியடியாகப் பேசியுள்ளார்.