இந்த உலகக்கோப்பை தொடரில் தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாப்பிரிக்க அணி குறித்த சலசலப்புகள் எழுந்துள்ளன.

அந்த அணியின் டேல் ஸ்டெயின் உள்ளிட்ட சில வீரர்கள் காயம் காரணமாக ஆட முடியாமல் போனது மற்றும் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றது போன்ற காரணங்களை முன்வைத்து அந்த அணி பலவீனமடைந்துவிட்டதாகவும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஆனால், தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை அதன் பிரச்சினை என்பது பொதுவாக திறமையை சார்ந்ததாக இருப்பதில்லை. ஏனெனில், அந்த அணியில் திறமை என்பதற்கு பொதுவாக பஞ்சம் இருந்ததில்லை. அந்த அணியின் தலையாய மற்றும் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது அதன் உளவியல்தான்.

இதர சாதாரண தொடர்களில் முழு திறமையைக் காட்டும் அந்த அணி, ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் மட்டும் யாருக்கும் புரியாத வகையில் சொதப்பலை தொடங்கிவிடும். அந்த அணிக்கான சர்வதேச தடை நீங்கி, அது ஐசிசி தொடர்களில் விளையாடத் தொடங்கிய காலம் தொ‍ட்டே இந்தப் பிரச்சினைதான்.

அந்த அணியின் முன்னாள் வீரராக இருந்து, வெற்றிகரமான இந்தியப் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிர்ஸ்டன், பின்னாளில் தென்னாப்பிரிக்க அணிக்கே பயிற்சியாளர் ஆனார். கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது, அவர் தனது சொந்த நாட்டு அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். ஆனால், அந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் காரணம் தெரியாத தடுமாற்றங்களை நாமெல்லாம் பார்த்திருப்போம்.

அதுவும் குறிப்பாக, நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த அரையிறுதியில், தென்னாப்பிரிக்க அணி எதற்காக அப்படி விளையாடியது? என்பதற்கு எவராலாவது விளக்கம் சொல்ல முடிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியே. அந்த உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், தென்னாப்பிரிக்க அணியின் உளவியல் சிக்கல் குறித்து கேரி கிர்ஸ்டனே புலம்பினார்.

அந்த அணியின் உச்சபட்ச சொதப்பலாக கடந்த 1999ம் ஆண்டு உலகக்கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் செயல்பட்டதையும் கூறலாம். வெறும் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. பந்துகள் தாராளமாக இருக்கின்றன. ஆனால், 1 விக்கெட் மட்டும்தான் கையில் இருக்கிறது.

ஒரு சாதாரண கத்துக்குட்டி அணி கூட அந்த சூழலில் சிறப்பாக செயல்படும். ஆனால், அந்த ஒரு ரன்னை எடுக்க முடியாமல் தடுமாறி ரன் அவுட் ஆகி, அந்த ஆட்டம் ‘டை’ ஆனது. விளைவு, கோப்பையை வென்றிருக்க வேண்டிய அந்தத் தொடரில், அரையிறுதியோடு அநியாயமாக வீட்டுக்குச் சென்றது தென்னாப்பிரிக்க அணி.

இப்படி, எத்தனையோ உதாரணங்களை அந்த அணியின் உளவியல் பிரச்சினைக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த மாபெரும் சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்தான் எப்படியேனும் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையெனில், திறமையை மட்டும் கொட்டி வைத்துக்கொண்டு, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்..!

ஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி ஒருநாளும் சாதிக்கப் போவதில்லை.