நாதுராம் கோட்சே குறித்த தனது கட்சியினரின் கருத்துக்கு நரேந்திர மோடி அளிக்கும் பதில் வெறுமனே சமாளிப்பு. அவர் இந்நாட்டின் பிரதமராக இருப்பவர். எனவே, காந்தியைக் கொன்ற கொலைகாரனைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பிரியங்கா காந்தி அளித்த பேட்டியின் தொகுப்பு.

மகாத்மா காந்தியைக் கொன்ற நபரை, தேச பக்தன் என்று கூறியவரின் மீது மோடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், நாதுராம் கோட்சே குறித்த தனது அபிப்ராயம் என்ன என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எனவே, கோட்சே குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை.

என் குழந்தைகள் ஒரு எளிமையான மற்றும் சராசரியான குழந்தைப் பருவ சூழலை அனுபவிப்பதே சிறந்தது என்று நான் நம்பினேன். மேலும், டெல்லியில் குழந்தைகளை வளர்ப்பதென்பது சவாலானதாக இருக்கிறது.

நானும் ராகுல் காந்தியும், வன்முறை மற்றும் இழப்புகளுக்கிடையே குழந்தைப் பருவத்தை கழித்தோம். அந்த சூழலை எனது குழந்தைகள் சந்திப்பதை நான் விரும்பவில்லை.

பொதுவாகவே, அரசியல் வாழ்வின் சுமை குடும்பத்தின் மீது, குறிப்பாக, அக்குடும்பத்திலுள்ள குழந்தைகளின் மீதுதான் விழுகிறது. அந்த சுமையை எனது குழந்தைகளின் மீது ஏற்றிவைக்க நான் விரும்பாததே, இத்தனை நாட்கள் அரசியலுக்கு வராததற்கு காரணம். தற்போது, என் குழந்தைகள் என்னை அரசியலில் ஈடுபட மகிழ்ச்சியாக அனுமதித்ததை தொடர்ந்து களமிறங்கியுள்ளேன்.

எனது அரசியல் திறமைகளெல்லாம், வீட்டு சமையலறை மற்றும் இதர வீட்டுப் பிரச்சினைகளிலேயே வீணாகின்றன. எனவே, இதை உருப்படியாக பயன்படுத்துமாறு எனது மகன் என்னை கிண்டல் செய்வான். கடந்த 2 ஆண்டுகளாகவே, என் பிள்ளைகள் இருவருமே, என்னை அரசியலில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

நான் அரசியலில் ஈடுபடுவதற்கு எனது தனிப்பட்ட வாழ்க்கையும், எனது அரசியல் பின்புலமும் மட்டுமே காரணமல்ல. பாரதீய ஜனதா தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருவதை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். மேலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் குளிர்காய்ந்து கொண்டிருந்த கொடுமையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனவே, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் அது மிகப்பெரிய கோழைத்தனம் என்று நினைத்தே அரசியலுக்குள் நுழைந்திருக்கிறேன்.

நான் அரசியலில் நுழைந்தபோது, பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களிடம் சென்று, அவர்களின் துயர்களைக் கேட்டு, அவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த அரசியல் அமைப்பில் அவர்களும் தங்களின் பங்கைப் பெறுமாறு செய்ய வேண்டுமென்பதே, எனது சகோதரர் ராகுல் காந்தி எனக்கு வழங்கிய அறிவுரைகள்.

எனது தாயைப் பொறுத்தவரை, நான் அதிகமாக பேசுகிறேன் என்றும், எனவே நான் என்ன பேசுகிறேன் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுரை கூறினார். ஆனால், நான் தேர்தல் பிரச்சாரங்களில் அதிகமாக பேசியதாய் நினைக்கவில்லை.

பிரதமர் மோடி குறித்து நான் கூறிய துரியோதன ஒப்பீட்டில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. இந்திய வரலாறு, அகந்தையை என்றுமே மன்னித்ததில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக, துரியோதனன் தொடர்பான ஒரு கவிதையை மேற்கோள் காட்டினேன். இதில் என்ன தவறு?

நரேந்திர மோடி எனது தந்தையை தரக்குறைவாக பேசும்போது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை. அவரின் அந்தப் பேச்சு, அவரின் பலவீனத்தையும், அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் செய்யும் வாய்ப்பிலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்பதையுமே காட்டுகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு நான் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அதுபோன்ற ஒரு சிக்கலான மற்றும் பெரிய மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்துவதென்பது சில மாதங்களில் நடக்கும் காரியம் அல்ல.

எங்களின் முதல் நோக்கம் பாரதீய ஜனதாவை தோற்கடிப்பது. அதேசமயம், எங்களின் மக்களவை வேட்பாளர்கள், சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணியை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினோம்.

உத்திரப்பிரதேசத்தில் வரும் 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து செயல்பட உத்தேசித்துள்ளோம். அதற்கு இடைபட்ட காலங்களில், வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுதான் என் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். எங்கள் கட்சிக்குள் எப்படியான புதிய நபர்களை கொண்டுவந்து, அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் உள்ளடக்கியது இந்த சவால்.

உத்திரப்பிரதேசத்தின் பிரமாண்ட கூட்டணியில் பங்கேற்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். எனது தாயார் மாயாவதியிடம் பேசினார். எனது சகோதரர் மயாவாதி மற்றும் அகிலேஷ் ஆகிய இருவரிடமும் பேசினார். எங்கள் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா கூட இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவே இதையெல்லாம் செய்தோம். ஆனால், அவரவர்களின் அரசியல் சூழல்கள் மற்றும் தேவைகள், அவரவர்களின் திட்டமிடுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கூட்டணி அமையவில்லை. எனவேதான், நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதேசமயம், நாங்கள் சிறப்பாகவே போராடுகிறோம் என்று கருதுகிறேன்.

நான் எனது பாட்டி இந்திரா காந்தியை நினைவுபடுத்துகிறேன் என்று கூறுவது சரியல்ல என்றே நினைக்கிறேன். அவரைப் பற்றி பேசுவதற்கு தேவையுள்ள இடங்களில் பேசுகிறேன். அவர் எனது பாட்டி என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர். அவர் இந்நாட்டிற்காக செய்த சேவைகள் ஏராளம். எனவே, ஒரு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் என்ற முறையில், அவரைப் பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது.

அவரையும் என்னையும் ஒப்பிடுவது மேலோட்டமானது. ஆனால், அவரின் அரசியல் பயணம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தோடு தொடங்கி, கடைசியாக அவரின் உயிர் தியாகத்தோடு முடிந்தது. எனவே, என்னோடு அவரை எப்படி ஒப்பிட முடியும்? நான் அரசியலில் நுழைந்து வெறும் 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது.

எனது பாட்டி புரட்சிகரமான சிந்தனை கொண்டவர் மற்றும் போராளி. ஆனால், நான் வெறும் போராளி மட்டுமே. ஒரு விஷயத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், அந்தப் போராட்டத்தை இறுதிவரை தொடர்வது என்பது வேண்டுமானால், எங்களுக்கு இடையிலான ஒற்றுமையாக இருக்கலாம்.

எனது சகோதரர் போட்டியிடும் இரண்டு ‍தொகுதிகளிலும் வெல்லும் பட்சத்தில், அவர் அமேதி தொகுதியை ராஜினாமா செய்யும்பட்சத்தில், அந்த தொகுதியில் போட்டியிடுவதெல்லாம் எனக்கு பெரிய சவால் அல்ல. எங்கள் கட்சியை 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு தயார்படுத்துவதுதான் பெரிய சவாலே.

ஆனால், ராகுல் காந்தி எந்த தொகுதியை கைவிடுகிறார் என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு. அதன்பிறகே, எனது போட்டியிடுதல் குறித்த கலந்துரையாடல் தொடங்கும்.

– மதுரை மாயாண்டி