இந்திய தலைநகரின் ஒரு சுரங்க ரயில்பாதைக்கான ஒப்பந்தப் பணி, ஏல அடிப்படையில் சீன நிறுவனமான எஸ்டிஇசி -க்கு வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேக் இன் இந்தியா, சுயசார்பு என்று வசனங்களை அள்ளிவீசும் பிரதமர் மோடியின் அரசின்கீழ் வரும் துறையின் ஒரு பெரிய ஒப்பந்தத்தை சீன நிறுவனம் கைப்பற்றியுள்ளது எந்தவகை சுயசார்பு அல்லது மேக் இன் இந்தியா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகவலைதள வாசிகள் பலர்.

இந்தியாவில் இப்பணியை குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் நிறுவனங்களே இல்லையா? அவற்றுக்கு அந்த திறன் இல்லையா? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து, மோடி குழுவினர் குஜராத்தில் நிறுவிய சர்தார் வல்லபாய் படேல் சிலையே சீனாவில் செய்யப்பட்டது எனும்போது, இவர்களின் கோஷமெல்லாம் வெற்று என்பதைத் தவிர, சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நக்கலடிக்கின்றனர் அவர்கள்!

எல்லாம் மக்களை ஏமாற்ற முயல்கிற, எந்த திறனுமற்ற வெற்று கவர்ச்சி கோஷங்கள் என்கின்றனர் அவர்கள்!