ராஞ்சி:

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில், பண்ணை வீடு கட்டி தற்போது அங்கேதான் தோனியின் குடும்பம் வசித்து வருகிறது. தோனியின் பண்ணை வீட்டுக்குள் மொத்தமே 6 பேர்தான் இருக்கிறார்கள். தோனி, சாக்ஷி மற்றும் மகள் ஷிவா இவர்களைத் தவிர செல்ல நாய்கள் மூன்று என 6 பேர்தான் இந்த பண்ணை வீட்டின் உறுப்பினர்கள்.


தோனி கார், மற்றும் பைக்குகளின் ரசிகர். அதனால், வித விதமான கார்களும் பைக்குகளும் தோனி வைத்துள்ளார். தற்போது, அவரின் வாகனப் பட்டியலில் புதியதாக டிராக்டர் ஒன்றும் சேர்ந்துள்ளது. விவசாயிகளுக்குத்தானே டிராக்டர்கள் தேவைப்படும் … தோனிக்கு எதற்கு என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆம்.. தோனியும் இனி விவசாயம் பார்க்கப் போகிறார்.

ஓய்வு நேரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடப் போகும் தோனி , ராஞ்சியில் உள்ள மகிந்திரா டிரக்டர் டீலரிடத்தில் ரூ. 8, 80,000 மதிப்புக்கு டிராக்டரை (Model 963 FE) தோனி புக் செய்துள்ளார். தோனியின் வீட்டுக்கு டிராக்டர் எடுத்து செல்லப்பட்டதும், தோனி அதை ஓட்டிப் பார்த்தார். தன் பண்ணை வீட்டில் புதிய டிராக்டரை தோனி ஓட்டும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவை 80,000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருந்தனர்.