கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் உலகின் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்து தருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மக்கள் வாழ்ந்து வரும் சூழலில் அவர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவு, உயிரிழப்பு மற்றும் இயற்கை சீற்றம் போன்ற அவசர காலங்களில் ஏற்படும் பல்வேறு விதமான பாதிப்புகளில் இருந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க அவசர பணிக்காக தேவைப்படும் நிதிக்கென ‘இந்திய சமூக நல நிதி’ ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

2009 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த இந்த நிதி மூலம், போர் சூழல் உள்ளிட்ட அவசர காலங்களில் இந்தியர்களை மீட்க தேவையான உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் விமான பயண செலவுக்கான தேவைக்காக இந்த நிதி ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு நாட்டில் இருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இந்த நிதியில் இருந்து ஆதாரப்பூர்வமான விவரங்களை அளித்து நிதியை பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2017 ம் ஆண்டு இந்த நிதி சட்டத்தில் மேற்கொண்ட திருத்ததங்களின் அடிப்படையில் மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் யோகா தினம், தேசிய தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த திருத்தம் செய்தது.

இதன்மூலம், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகளின் கலை பிரிவினர் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் இந்த நிதியில் இருந்து ஏராளமான தொகையை வீணடித்து வருகின்றனர்.

உக்ரைனில் போர் துவங்கும் முன் மாணவர்களுக்கு ஓரிரு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்த அரசு அவர்களுக்கு கட்டண சலுகை ஏதும் அளிக்காமல் உயர்த்தப்பட்ட கட்டணத்தில் அழைத்து வந்தது.

தவிர, போர் சூழலில் தூதரகத்தின் உதவியைத் தேடிவந்த மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டதா என்பதும் தற்போது அண்டை நாடுகளில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கும் இந்த உதவிகள் கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகவே உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குருதீப் சிங் சப்பால் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.