டில்லி

ந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர்.  உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவப்படை தாக்குதலில் உயிரிழந்தார்.  இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

”உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களைப் பணைய கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது.   நாம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரஷிய தரப்பின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

”இந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்துவைக்கப்படவில்லை. நேற்று உக்ரைன் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நேற்று கார்கில் நகரில் இருந்து பெரும்பாலான இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய மாணவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதிக்கு இந்திய மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க கோரியுள்ளோம்.

ஏராளமான இந்தியர்கள் கடந்த சில நாட்களாக உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏராளமான இந்தியர்கள் விரைவாக மீட்கப்பட்டதைச் சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை தங்கள் எல்லைக்குள் அழைத்துத் தங்க இடம் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.