சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் மானிய கோரிக்கைகள் குறித்து தொகுக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கிய நிலையில் ஜூலை 1ந்தேதி (நேற்று) முதல் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.
இன்று காலை கேள்வி நேரம் தொடங்கியது, இதில் துறை சாந்த பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது திமுக சார்பில், சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். 55 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சேலம் தொழில் பயிற்சி மையத்தில் உள்ள செய்முறை கூடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அவர்களுக்கு தனியாக ஒரு அரங்கம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேஷனல் கவுன்சில் ஃபார் ஒகேஷனல் டிரைனிங் விதிக்கு உட்பட்டு, சேலம் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி மையத்தின் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது.
தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி 10% இடஒதுக்கீட்டால் சிக்கல் ஏற்படும்; எதிர்காலத்திலே ஆன்லைனின் தேர்வுகள் நடத்தப்படலாம். எனவே தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். மகளிர் தங்கும் விடுதியில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு மேலும் சில கழிப்பறை கட்ட திமுக கோரிக்கை விடுத்தது.
இது விரைவில் முடித்து தரப்படும் என அதிமுக உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கக் கூடிய மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டிய மொழியை மத்திய அரசு அலுவலகத்தில் ஆட்சி மொழியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுபோல தமிழகத்திலும் மேற்கொள்ள திமுக கோரிக்கை வைத்தது.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜ்,ன ஜெயலலிதாவின் அரசு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக்க முயற்சி மேற்கொள்ளும் என்றும், ”மதர் தமிழ் மையம்” அமைக்க மத்திய அரசிடம் ரூ.50 கோடி கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை பற்றி பேச விரும்புகிறேன். நீட் தேர்வு கட்டாயமாக திணிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகி உள்ளது. மருத்துவ படிப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு தந்திரமான அறிவிப்பு. இதனால் சமூக நீதி நீர்த்துப் போகிறது. இது ஸ்லோ பாய்சன் போன்றது. மத்திய அரசின் தந்திரத்துக்கு மாநில அரசு மயங்கி விடக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி நல்ல முடிவு எட்ட விரும்புகிறேன் என்றார்.
திமுக எம்.எல்.ஏ வேலு பேசுகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. இதனால் இடம் பெயர்வோர் எந்த மாநிலத்திலும் அரசு உணவு பொருட்களை பெற்று கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அரிசி, கோதுமை, சர்க்கரை விலை மாறுபடுகிறது. பல மாநிலங்களில் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. 1 கோடியே 93 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 304 டன் அரிசி ஒரு ஆண்டுக்கு தமிழகத்துக்கு தேவை.
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் வந்தால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். இந்திக்காரர்கள் தமிழகத்தில் அரிசி வாங்கினால் தமிழக மக்கள் அவதியுறுவர். ஒரே நாடு, ஒரே கார்டு, ஒரே தேர்வு என்று பேசிக்கொண்டு இருந்தால், மாநில சுயாட்சிக்கு சுதந்திரம் இல்லாமல் போய்விடும். மத்திய அரசு சர்வாதிகாரம் செய்வதுபோல் ஆகிவிடும் என வேலு ஆவேசமாக பேசி அமர்ந்தார்.
இதற்கு அதிமுகவினர் கூச்சல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ், மத்திய அரசு திட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிந்த, பரிசோதனை முயற்சியாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் செயல்படுத்தப்பட்டது.
தற்போது ஒரு நபருக்கு 12 கிலோ அரிசி கொடுக்கப்படுகிறது. மூன்று நபர்கள் கொண்ட குடும்பம் என்று சொன்னால் 20 கிலோ அரசி கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் 3 நபர்களுக்கு 15 கிலோ அரிசி தான். தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இவ்வளவு சலுகைகள் வழங்கப்படு கின்றன. தமிழகத்தின் சர்க்கரை மானியமும் வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தான் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீட் தேர்வில் வட மாநிலத்தவர்கள் எவ்வாறு அதிகளவில் தேர்ச்சி பெறுகிறார்கள் என ஆய்வு செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மிண்டும் கொண்டு வர வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை வைத்தது.
அதிமுகவினருக்கு கொடுக்கப்படும் பொன்னான நேரத்தில், மக்களின் தொகுதி பிரச்னைகளை பேசாமல் ஜெயலலிதாவின் பழைய சாதனைகளை அடுக்கிச் செல்கின்றனர் என திமுக உறுப்பினர் கள் குற்றம் சாட்டினர்.
2017-18ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை என்று திமுக தரப்பு கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கணினி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தான் 2 ஆண்டுகளாக கணினிகள் வழங்கவில்லை. இந்த விஷயத்தை யாரும் திரித்து கூற வேண்டாம். விரைவில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.
தமிழகத்தில் உள்ள 450க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியர்கள் தற்காலிக பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையை தவிர்த்து, நிரந்தர வேலை கொடுக்க அதிமுக ஆவண செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.